அதிகரித்துள்ளது பெய்ட்டி புயலின் வேகம்; பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்.....
இன்று பிற்பகல் புயலாக வலுகுறைந்து காக்கிநாடா கடற்கரை பகுதியில் பெய்ட்டி கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!
இன்று பிற்பகல் புயலாக வலுகுறைந்து காக்கிநாடா கடற்கரை பகுதியில் பெய்ட்டி கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!
பெய்ட்டி அதி தீவிர புயல் எதிரொலியாக, தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. பழவேற்காட்டில், மீனவ மக்கள் மீட்கப்பட்டு, புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பெய்ட்டி புயலின் எதிரொலியாக, தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், கடல் சீற்றமாக காணப்படுகிறது. நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில், கடல் பலத்த சீற்றத்துடன் உள்ளது..
இதனால், கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த படகுகள், ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடையும் சூழல் ஏற்பட்டதால், கிரேன்கள், டிராக்டர்கள் மூலம், பாதுகாப்பான பகுதிகளுக்கு மீனவர்கள், தங்கள் படகுகளை கொண்டு சென்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் கிழக்கு கடற்கரை சாலைப் பகுதிகளான, கோவளம், மாமல்லபுரம், கல்பாக்கம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. பலத்த காற்றுடன், சுமார் 2 மீட்டர் உயரம் வரை கடல் அலைகள் எழுகின்றன. படகுகள் அனைத்தும் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் வீடுகளுக்குள் கடல்நீர் உட்புகும் சூழல் ஏற்பட்டதால், கோரைக்குப்பம் பகுதி மீனவ மக்கள் ஆண்டார்மடம் புயல் பாதுகாப்பு மையத்தில், தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் இருந்து 320 கி.மீ. தொலைவில் தீவிர புயலாக மையம் கொண்டுள்ள பெய்ட்டி, மணிக்கு 23 கிலோ மீட்டராக வேகம் அதிகரித்து ஆந்திராவை நோக்கி செல்கிறது. இன்று பிற்பகல் புயலாக வலுகுறைந்து காக்கிநாடா கடற்கரை பகுதியில் பெய்ட்டி கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.