இந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் – 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக வட மாநிலங்களில் நடைபெற்று வந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு பூங்காவில் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான செட் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக அங்கு நடைபெற்று வந்தது. 


இந்நிலையில் சென்னையில் நடந்த படப்பிடிப்பின் போது பெரிய விபத்து ஏற்பட்டு அனைவரையும் கலங்கச் செய்துள்ளது. கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் உதவி இயக்குனர் கிரு‌‌ஷ்ணா, கலை உதவி இயக்குனர் சந்திரன், உதவியாளர் மது ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடலுக்கு கமல் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:


இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து என் குடும்பத்தில் நடந்த விபத்தாக கருதுகிறேன். இதுபோன்ற விபத்து இனி நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும். 


 



 


சினிமாவில் பாதுகாப்பு இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. நான் நூலிழையில் உயிர்பிழைத்தேன். 4 நொடிகளுக்கு முன்பு வரை நான் அங்கு தான் இருந்தேன். இரண்டு நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பில் இணைந்த கிருஷ்ணா இன்று உயிருடன் இல்லை. என்று கூறினார்.