திருபுவனம் ராமலிங்கம் கொலை; காவல்துறை அறிக்கை தேவை...
திருபுவனம் ராமலிங்கம் கொலை குறித்து காவல்துறை உடனடியாக அறிக்கை வெளியிடவேண்டும் என்றும் தவறான பரப்புரை யாரும் வெளியிட வேண்டாம் என்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.
திருபுவனம் ராமலிங்கம் கொலை குறித்து காவல்துறை உடனடியாக அறிக்கை வெளியிடவேண்டும் என்றும் தவறான பரப்புரை யாரும் வெளியிட வேண்டாம் என்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது... இன்று (07-02-2019) ஆங்கில மற்றும் தமிழ் நாளிதழ்களில் வெளிவந்துள்ள செய்தி மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்ப கோணம் அருகில் உள்ள பட்டுப்புடவைகள் நெசவுக்கு புகழ்பெற்ற திருபுவனத்தில் வி. ராமலிங்கம் என்பவர் சில சமூக விரோதிகளால் தாக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் மரணமுற்றார் என்றும் மதமாற்றம் செய்வதை எதிர்த்த காரணத்தினால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் தலைப்பிட்டு செய்தி பிரசுரமாகி இருக்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்கள் மதமாற்றத்தை தடுத்த ஒருவர் கொல்லப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இதனால் சமூக நல்லிணக்கம் பாதிக்கும் என்றும் ஒரு சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து இந்த கொலையை புலனாய்வு செய்யவேண்டும் என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்த கொலை பற்றிய எந்த ஒரு விவரத்தையும் இந்த நேரம் வரை காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. கொலை செய்யப்பட்டவர் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர், என்ன தொழில் செய்தவர், திருபுவனம் முஸ்லிம் தெருவுக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு எதனால் வந்தது? எப்படி வந்தது? முஸ்லிம் தெருவுக்கும் மதமாற்றத்துக்கும் என்ன சம்பந்தம்?
நாட்டில் தொடர்ந்து நடைபெற்றுவரும் கொலை களுக்கான காரணங்களை பத்திரிகை வாயிலாக அறியும்போது மிகுந்த ஆச்சர்யமும், பேரதிர்ச்சியும், பெரும் அச்சமும் மக்களுக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கிற இவ்வேளையில் திருபுவன கொலை செய்தியால் தமிழக மக்கள் மத்தியில் மேலும் குழப்பமோ, கொந்தளிப்போ ஏற்பட்டுவிடக்கூடாது என்ப தில் அரசியல் தலைவர் களும், பத்திரிகை துறை யினரும், ஊடகத்தாரும் கவனமாக இருக்க வேண்டும் என்பது இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பணிவான வேண்டுகோளாகும்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில செயலாளர் ஆடுதுறை ஏ.எம். ஷாஜஹான் தலைமையில், மாநில துணைத் தலைவர் அதிரை எஸ்.எஸ்.பி. நசிருத்தீன், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் ஜெய்னுல் ஆப்தீன், நாகை மாவட்ட முன்னாள் தலைவர் டாக்டர் சம்சுதீன் ஆகியோர் அடங்கிய குழுவினர் திருபுவனம் சம்பவம் குறித்து ஆய்வு மேற்கொண்டு தலைமை நிலையத்துக்கு உடனடியாக அறிக்கை அளிக்குமாறு பணிக்கப்பட்டுள்ளார்கள்.
காவல்துறை அதிகாரி களிடமிருந்து சரியான தகவல்கள் வெளிவரும் வரை திருபுவனம் சம்பவம் பற்றிய அறிவிப்புகளோ, அறிக்கைகளோ வருவதும் பரப்புவதும் நியாயமானதாக இருக்காது என்பதையும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.