அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பாக இடைகால உத்தரவு கிடையாது: மதுரை கிளை
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக இடைகால உத்தரவு பிறப்பிக்க முடியாது என மதுரை நீதிமன்றம் கிளை தெரிவித்துள்ளது.
ஊதிய உயர்வு, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று 7வது நாளாக காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி அவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருவதால், மாணவர்களின் நலன் கருதி தற்காலிக ஆசிரியர்களை நியமித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கிடையே தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட 422 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த 422 பணியிடங்களும் காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு, இன்று மாலைக்குள் அந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் இன்றைக்கு பணிக்குத் திரும்ப இறுதியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கையை ஏற்காத தமிழக அரசு. தற்போது போராட்டத்தில் இறங்கியிருக்கும் அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுடன் பேச்சுவாரத்தை நடத்த அரசு தயாராக உள்ளது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
முன்னதாக ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் தங்கள் கல்வி பாதிக்கப்படுவதால் ஆசிரியர்கள் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனக்கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட பின்னர், ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக ஜனவரி 25 ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்தநிலையில், இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. கோரிக்கை தொடர்பாக இடைகால உத்தரவு விதிக்க முடியாது. நேரடியாக வந்திருந்தால் தீர்வு குறித்து விவாதித்திருக்கலாம். ஆனால் நீதிமன்றத்க்கு நேரடியாக வரவில்லை. போராட்டம் நடத்திய பிறகு நீதிமன்றத்தை அனுகி உள்ளீர். எனவே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக இடைகால உத்தரவு பிறப்பிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இதுதொடர்பான வழக்கு வரும் பிப்ரவரி 18 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.