இன்போசிஸ் நிறுவனத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:-


சென்னையை அடுத்த செங்கல்பட்டில் உள்ள மகிந்திரா சிட்டியில் உள்ள இன்போசிஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்த இளையராஜா என்ற மென்பொறியாளர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த தளவாளப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான இளையராஜா ஒவ்வொரு நாளும் பணி முடித்த பின்னர் தமது இல்லம் திரும்புவது வழக்கம். 


ஆனால், கடந்த 30-ம் தேதி இரவு வீடு திரும்பவில்லை. மாறாக, மகிந்திரா சிட்டியில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தின் தங்கும் விடுதியில் இளையராஜா மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். 


அவரது மூக்கு, வாய், காது அருகே ரத்தம் உறைந்திருந்ததாகவும், ஆடைகள் களையப்பட்டு கிடந்ததாகவும் கூறப்படுகிறது. 


பணி முடிந்தவுடன் வீடு திரும்ப வேண்டிய இளையராஜா தங்கும் விடுதிக்கு சென்றது ஏன்? அவராக சென்றாரா அல்லது அவரை வேறு எவரேனும் அழைத்துச் சென்றார்களா? ஆகிய வினாக்களுக்கு சரியான வினா கிடைக்கவில்லை. 


இளையராஜா உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் செங்கல்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக அவரது மனைவிக்கு சக பணியாளர் ஒருவர் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது, இளையராஜாவின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக பிணவறையில் கிடத்தப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.


இதனால் இளையராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு உயிரிழந்தாரா? அல்லது உயிரிழந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாரா என்ற ஐயம் எழுகிறது. அண்மைக்காலமாகவே வடஇந்தியர்களுடன் கலந்து பணியாற்றும் இடங்களிலும், படிக்கும் இடங்களிலும் தமிழர்கள் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. 


சில மாதங்களுக்கு முன் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முதுநிலை மருத்துவப்படிப்பில் சேர்ந்திருந்த திருப்பூரைச் சேர்ந்த சரவணன் என்ற மருத்துவர் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார். அவரைத் தொடர்ந்து இப்போது சென்னை அருகிலேயே இளையராஜா என்ற மென்பொறியாளர் மர்மமான முறையில் உயிரிழந்திருக்கிறார்.


இளையராஜாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்துள்ள நிலையில், அதுகுறித்து நீதி விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிடவேண்டும். அதுமட்டுமின்றி, இளையராஜாவின் குடும்பத்திற்கு இன்ஃபோசிஸ் நிறுவனமும், தமிழக அரசும் தலா ரூ.25 லட்சம் நிவாரண உதவி வழங்கவேண்டும்.


இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.