ஜல்லிக்கட்டு: மாணவர்களுக்கு ஆதரவாக ஐடி., ஊழியர்கள், வணிகர்கள்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுச்சேரியில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்பினரும் களமிறங்கி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கல்லூரி மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவுகளும் பெருகி வருகிறது. மாணவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும், பெண்களும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். சினிமா நடிகர், நடிகைகள், இயக்குனர், இசையமைப்பாளர்கள், சின்னத்திரை நடிகர்கள் ஆகியோரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர்கள் மற்றும் நாமக்கல் குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று ஒருநாள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு, ஜல்லிக்கட்டிற்காக மாணவர்கள் நடத்தும் பிரம்மாண்ட போராட்டத்திற்கு தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஐ.டி., ஊழியர்கள், வணிகர்கள் போன்றோர் மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக களம் இரங்கியுள்ளனர்.