ஜெ., சிலையின் குறைபாடுகள் சரிசெய்யப்படும்: தம்பிதுரை விளக்கம்!
ஜெயலலிதா சிலையில் உள்ள குறைபாடுகள் விரைவில் சரிசெய்யப்படும் என்று மக்களவை துணை சபா நாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்டு உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலை குறித்து சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஜெ., பிறந்த நாளை ஒட்டி அவரது முழு உருவ வெண்கல சிலை நேற்று முன்தினம் சென்னையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்டது. இந்த சிலையை பிரசாத் என்ற சிற்பி வடிவமைத்திருந்தார்.
அவருக்கு அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், பொன்னாடை போர்த்தினார். இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மோதிரம் அணிவித்து பாராட்டினார். ஆனால், ஜெ., சிலையை பார்த்த தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
அந்த சிலை ஜெ., உருவ அமைப்புடன் ஒத்துப் போகவில்லை என்றும் அந்த சிலையில் முக சாயல் மறைந்த நடிகை காந்திமதி போல இருப்பதாகவும், முன்னாள் அமைச்சர் வளர்மதி சாயலில் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், இது குறித்து இன்று பேசிய மக்களவை துணை சபா நாயகர் தம்பிதுரை:_ ஜெயலலிதா சிலையில் உள்ள குறைபாடுகள் விரைவில் சரிசெய்யப்படும் என்றார்.
மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதில் பரிசீலிப்பதாக முதலமைச்சர் மற்றும் பிரதமர் உறுதி கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.