டிஜிபி ராஜேந்திரனுடன் முதல்வர் ஓபிஎஸ் ஆலோசனை
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், டி.ஜி.பி.ராஜேந்திரனுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், டி.ஜி.பி.ராஜேந்திரனுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையின் போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடை பெறாமல் இருந்தது.
இந்த ஆண்டு பொங்கலையட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று தமிழக மக்களும் ஜல்லிக்கட்டு
ஆர்வலர்களும் காத்திருந்தனர். ஆனால் அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. இதனால் இந்த பொங்கலுக்கும் ஜல்லிக்கட்டு மீதான தடை நீடித்தது. இருப்பினும் தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தன.
இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு முன்பே தொடங்கிய மாணவர்கள் போராட்டம் நீண்டு கொண்டே செல்கிறது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சமூக வலைதளங்கள் மூலமாகவே மாணவர்களும் இளைஞர்களும் ஆதரவு திரட்டினர். இந்த போராட்டத்துக்கு யாரும் தலைமை தாங்கி அழைப்பு விடுக்கவில்லை.
சென்னையில் மெரீனா கடற்கரையில் நேற்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் திரள தொடங்கினர். மெரீனாவில் தொடங்கிய ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான இந்த போராட்டம் வேகமாக பகிரப்பட்டது.
இதனையடுத்து அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதால் மெரீனாவில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே நேற்று மாலையில் மெரினா கடற்கரை பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அப்போதும் கலைந்து செல்லாத இளைஞர்கள், தங்களிடம் உள்ள செல்போன் டார்ச் வெளிச்சத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இந்த போராட்டங்க தொடர்பாக சட்டம் ஒழுங் பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தலைமை செயலகத்தில் டிஜிபி ராஜேந்ந்திர, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.