நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ஜனசதாப்தி விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செவ்வாய்கிழமை தவிர மற்ற கிழமைகளில் கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கு ஜனசதாப்தி விரைவு ரயில் இயக்கப்படுகிறது. தினமும் காலை 7. 10 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் இந்த விரைவு ரயில் ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் வழியே மயிலாடுதுறைக் சென்றடையும்.


16 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 1500 பேர் வரை பயணிக்கலாம். இந்நிலையில் இன்று காலை கோவையில் இருந்து புறப்பட்ட இந்த ரயில் நாகப்பட்டினத்தில் சித்தர்காடு ரயில்வே கேட் அருகே ஒற்றை பாதையில் இருந்து மாற்று பாதைக்கு மாறிய போது வளைவு ஒன்றில் தடம் புரண்டது. திருச்சியில் இருந்து மயிலாடுதுறை ரயில்வே தடத்திற்கு மாறிய போது தண்டவாளத்தை விட்டு ரயில் என்ஜின் விலகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. கோவையில் இருந்து மயிலாடுதுறை நோக்கி செல்லும் ஜனசதாப்தி விரைவு ரயில் மயிலாடுதுறை அருகே வந்த பிறகு நான்காவது பிளாட்பார்மில் செல்வதற்காக ரயிலை ஓட்டுநர் இயக்கிய போது ரயிலின் சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.


விபத்தின் போது ஓட்டுநர் சாதூர்யமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த ரயிலில் 700 பயணிகள் இருந்த நிலையில், அவர்கள் விபத்து நடந்த பகுதியில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் நடந்து மயிலாடுதுறை ரயில் நிலையத்துக்கு சென்றடைந்தனர்.


மயிலாடுதுறை ரயில் நிலையத்துக்கு வருவதற்கு இது தான் முக்கிய ரயில் பாதை என்பதால், விபத்திற்கு பின்னர் பல்வேறு பகுதிகளில் இருந்து மயிலாடுதுறைக்கு வரும் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.