TN பட்ஜெட்டை உதவாக்கரை பட்ஜெட் என கூறிய ஸ்டாலின் தான் உதவாக்கரை: ஜெயகுமார்
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தேர்தல் கூட்டணி பற்றி விவாதிக்கப்படவில்லை; மக்களவை தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்!
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தேர்தல் கூட்டணி பற்றி விவாதிக்கப்படவில்லை; மக்களவை தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்!
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக தலைமையில் நாடாளுமன்ற தேர்தலுக்காக மெகா கூட்டணி உருவாகும் என உறுதி அளித்துள்ளார்.
தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் நேற்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். பல்வேறு புதிய திட்டங்களை தமிழக அரசு, இந்த பட்ஜெட்டில் அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் தலைமையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் பலர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மாநில வளர்ச்சியில் மக்களை ஏற்றப்பாதைக்கு எடுத்துச் செல்கின்ற சிறந்த பட்ஜெட் இது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 24 ஆம் தேதி பல்வேறு நலத்திட்டங்கள் வழங்குவது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
தேசிய அளவில் தமிழகத்தின் வளர்ச்சி 8.16 சதவீதத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இருக்கின்ற நிதி நிலைமையைக் கொண்டு, மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்ய வேண்டியுள்ளது. வருவாய் பற்றாக்குறை 5 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இது நல்ல கண் உள்ளவர்களுக்கு நன்றாகத் தெரியும், காமாலை கண் உள்ளவர்களுக்கு தெரியாது. சென்னையின் வளர்ச்சிக்கு 2,000 கோடி ரூபாய் நிதி ஒதிக்கியுள்ளது ஸ்டாலின் கண்களுக்கு தெரியவில்லையா? இதற்கு முன்பு இருந்தவர்கள் பண்புள்ளவர்களாக இருந்தார்கள், ஆனால் ஸ்டாலின் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசி வருகிறார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வீடு என்பது முக்கியம். பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 லட்சம் வீடுகள் கட்டித் தர நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சிறு,குறு தொழிலில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும் என்றார் ஜெயக்குமார். மேலும் பல கட்சிகள் கூட்டணிக்காக அதிமுகவை அணுகியுள்ளதாகவும், தேர்தலின் போது, ஒரு மெகா கூட்டணியை அதிமுக தலைமை தாங்கும் என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.