ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் குழுவினரிடம் அறிக்கை தருமாறு தமிழக அரசு கேட்டிருந்தது. இதனையடுத்து இந்த அறிக்கை எய்ம்ஸ் டாக்டர்கள், தமிழக அரசிடம் அறிக்கை ஒன்று இன்று காலை வழங்கியுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக சுகாதார துறை செயலாளர் இந்த அறிக்கையை பெற்றுக்கொண்டார். 5 சிறப்பு டாக்டர்கள் குழுவினர் இதில், தங்களின் சிகிச்சை தொடர்பான கருத்துக்களை தெரிவித்துள்ளனர். 


இந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


கடந்தாண்டு செப்டம்பர் 22-ம் தேதி இரவு உடல்நலக்குறைவு காரணமாக ஆம்புலன்ஸ் மூலம் ஜெயலலிதா மயங்கிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவர் நீரிழிவு நோய் மற்றும் நீர்ச்சத்துக் குறைபாடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.


அப்போலோ மருத்துவமனையில் அவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் தெரிந்தது. இந்நிலையில் டிசம்பர் 5-ம் தேதி திடீரென இதய செயல் இழப்பு ஏற்பட்ட போது அவரை காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இதய, நரம்பியல் செயல்பாட்டில் எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. இதய செயலிழப்பிற்கு பிறகு ஜெயலலிதா உடல்நிலையை மருத்துவர்கள் ஆய்வு செய்தனர். அவருக்கு தவறான மருந்துகள் ஏதும் அவருக்கு அளிக்கப்படவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் மருத்துவமனையில் இருந்த போது தமிழக அரசு அதிகாரிகளுடம் ஜெயலலிதா ஆலோசித்தார் எனவும் சிகிச்சை குறித்த அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரம் அற்றவை எனவும் தமிழக அரசு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.


தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இந்த அறிக்கை குறித்து கூறியதாவது:-


மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாக தேவையற்ற வதந்திகள் பரவி வருகிறது. இதை கருத்தில் கொண்டு, ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக, விரிவான அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


மாநில அரசின் கோரிக்கையை ஏற்று எய்ம்ஸ் மருத்துவர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு 5 முறை வருகை தந்தனர். அப்பல்லோ மருத்துவர்கள், எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் தமிழக அரசு மருத்துவர்கள் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்தனர். அவருக்கு உலக தரத்திலான சிகிச்சை அளிக்கப்பட்டது. 


மத்திய அரசிடமிருந்து கேட்டு எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் சிகிச்சை குறித்து பரவும் அனைத்து வதந்திகளும் பொய்யானவை என இந்த அறிக்கை மூலம் நிருபணமானது என கூறினார்.