ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க எய்ம்ஸ் டாக்டர்கள் வருகை
முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து சிறப்பு டாக்டர்கள் சென்னை வந்தள்ளனர்.
தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு 22-ம் தேதி இரவு உடல் நலக் குறைவால் ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு இருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டது.
லண்டனைச் சேர்ந்த சிறப்பு டாக்டர் ரிச்சர்ட் பீலே கடந்த 30-ம் தேதி அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார். அவரது ஆலோசனைப்படி தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் வெளியிட்ட செய்தியில்:- முதல் வருக்கு ஏற்பட்டுள்ள நோய்த் தொற்றை சரிசெய்வதற்கான மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. செயற்கை சுவாச உதவியுடன் கூடிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வரின் உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் காணப்படுகிறது. அவர் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையிலிருந்து சிறப்பு டாக்டர்கள் குழுவினர் நேற்று சென்னை வந்தனர். நுரையீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜி.சி.கில்னானி, மயக்க மருத்துவ நிபுணர் டாக்டர் அஞ்சன் த்ரிக்கா, இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் நிதிஷ் நாயக் ஆகிய 3 பேர் அந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் டாக்டர் நிதிஷ் நாயக் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மருத்துவ ஆலோசகர் ஆவார்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த சிகிச்சைகள் பற்றி எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினர் ஆராய்வார்கள். தற்போது சிகிச்சை அளித்துவரும் டாக்டர்கள் குழுவுடன் ஆலோசித்து, அடுத்து மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள் தொடர்பான ஆலோசனைகளை அவர்கள் வழங்குவார்கள் எனக் கூறப்படுகிறது