ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணைக்கு சசிகலா ஆஜராக மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆணையத்தில் இதுவரை 120 பேர் புகார் மனுக்கள் அளித்துள்ளனர். மேலும், 28 பேர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.


சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் கல்சா மகால் கட்டிடத்தில் விசாரணை ஆணையத்துக்கான அலுவலகம் அமைந்துள்ளது.


இதன் தொடர்ச்சியாக, ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து, அவருடன் நெருக்கமாக இருந்தவர்களிடம் தகவல்கள் பெற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் முடிவு செய்தது.


அவற்றின் அடிப்படையில் கடந்த மாதம் 22-ந் தேதி முதல் ஆணையம் நேரடி விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 16 பேர் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.


மேலும் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் டிடிவி தினகரன், இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆகியோருக்கு கடந்த 27-ம் தேதி சம்மன் அனுப்பியிருந்தது. அனைவரும் 7 நாட்களுக்குள் ஜெயலலிதா மரணம் தொடர்பாக தங்களிடம் உள்ள ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது.


அதன் அடிப்டையில் சசிகலா, அப்போலோ மருத்துவமனை குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி, உள்ளிட்டோருக்கும் ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது.


அந்த சம்மனில் சசிகலாவுக்கு இன்னும் 15 நாளில் பதிலளிக்க வேண்டும் என்றும் ஆறுமுகசாமி ஆணையம் குறிப்பிட்டிருந்தது.


இந்நிலையில் ஆர்கே நகரில் சுயேச்சையாக வெற்றி பெற்ற தினகரன், சிறையில் சசிகலாவிடம் ஆசி வாங்க 28-ம் தேதி பெங்களூர் வந்திருந்தார். சசியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்காக சசிகலாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றேன்.


ஜெயலலிதா நினைவு நாளில் இருந்து சசிகலா மவுன விரதத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா ஆஜராக மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.


சசிகலா சார்பாக வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளிப்பார் என்றும் கூறப்படுகிறது. சசிகலா மவுன விரதத்தில் இருப்பதாலேயே விசாரணை ஆணையம் முன் ஆஜராகமாட்டார் என்றும் கூறப்படுகிறது.