ஜெயலலிதா நினைவு தினம்: அதிமுகவில் ஏற்பட்ட திருப்பங்கள்!!
கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதியான இதேநாளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதியான இதேநாளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானார்.
தமிழக முதல்வராக 6-வது முறையாக கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதவியேற்றார் ஜெயலலிதா. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி திடீர் உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் அதிமுக தொண்டர்கள் ஆடிபோனார்கள். அவருக்கு அப்பல்லோ மருத்துவர்கள், லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, சிங்கப்பூர் மருத்துவர்கள் குழு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் என தொடர்ந்து சிகிச்சையளித்து வந்தனர்.
ஜெயலலிதா குணமடைந்துவிட்டார் விரைவில் வீடு திரும்புவார் என அதிமுக நிர்வாகிகளும் அப்பல்லோ மருத்துவர்களும் தெரிவித்தனர். இதனால் ஜெயலலிதா நிச்சயம் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையுடனே அனைவரும் இருந்தனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி மாலை ஜெயலலிதாவுக்கு கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. ஜெயலலிதாவின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்தது மருத்துவமனை நிர்வாகம். போலீசார் உஷார் படுத்தப்பட்டனர் இதனால் அப்பல்லோ மருத்துவமனை வளாகம் உட்பட தமிழகம் முழுவதும் அசாதாரண சூழல் நிலவியது.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 5-ம் தேதி மாலை 6 மணியளவில் ஜெயலலிதா காலமானதாக பெரும்பாலான தொலைக்காட்சிகளில் வெளியானது. இதனால் அப்பல்லோ மருத்துவமனை முன்பு கூடியிருந்த மக்கள் அடித்துக்கொண்டு அழுது புலம்பினர். இதனை மறுத்து அறிக்கை வெளியிட்டது அப்பல்லோ மருத்துவமனை. ஜெயலலிதா மரணம் என பரவும் செய்தி வதந்தி என்றும் அவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம்.
சுமார் 20 நிமிடங்களிலேயே இணையத்தளங்கள் மற்றும் செய்திப் பத்திரிகைகளில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டதுடன் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்த கட்சிக் கொடி முழுக் கம்பத்திற்கு உயர்த்தப்பட்டது. பின்னர் சிகிச்சைபலன்றி ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதாக அப்பல்லோ மருத்துவமனை நள்ளிரவில் அறிவித்தது. இந்த தகவல் தமிழக மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஜெயலலிதா மறைந்த ஒருசில மணிநேரங்களிலேயே தமிழகத்தின் முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். ஆட்சியை ஓ.பன்னீர்செல்வம் கவனித்து வர, அதிமுக நிர்வாகப் பொறுப்புகளை ஏற்க ஜெயலலிதாவின் தோழி சசிகலா முடிவு செய்தார்.
பின்னர் டிசம்பர் 29-ம் அதிமுக பொதுக்குழு கூடி, சசிகலாவை கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்தது. டிசம்பர் 31 -ஆம் தேதி அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றார்.
இதனிடையே, முதல்வர் பொறுப்பை ஏற்ற ஓ.பன்னீர்செல்வம் பிப்ரவரி 5-ம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்து கவர்னருக்கு கடிதம் அளித்தார். அதேசமயம், சசிகலாவை சட்டப் பேரவை அதிமுக குழுத் தலைவராக அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் தேர்வு செய்தனர்.
இதனிடையே, சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி உறுதி செய்தது. இதையடுத்து, அவர் பெங்களூருசிறைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பிப்ரவரி 5-ம் தேதி முதல் சுமார் 10 நாள்களுக்கு சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், பிப்ரவரி 7-ம் தேதி, சென்னை மெரினாவில் அமைந்துள்ள ஜெயலலிதா சமாதியின் முன் ஓ.பன்னீர்செல்வம் திடீரென தியானத்தில் ஆழ்ந்தார். அங்கு சுமார் 40 நிமிட யானத்துக்கு பிறகு தனது மெளனத்தை கலைத்த அவர், தன்னை வற்புறுத்தி ராஜிநாமா கடிதம் வாங்கப்பட்டதாக குற்றஞ்சாட்டினார். தான் தனி அணியாக செயல்படப் போவதாகவும் அறிவித்தார். இதனால், அதிமுக இரண்டாக உடைந்தது.
சசிகலா முதல்வராக முடியாத சூழ்நிலையில், எடப்பாடி கே.பழனிசாமியை ஆளும் அதிமுக எம்.எல்.ஏ.,க்களில் பெரும்பான்மையினர் பேரவை குழுத் தலைவராகத் தேர்வு செய்தனர். இதையடுத்து, அவருடன் 30 அமைச்சர்களுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணத்தை செய்து வைத்தார்.
இதனிடையே, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி காலியானதையடுத்து. கடந்த மார்ச் மாதம் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில், கட்சி இரண்டாக பிளவுபட்டதால், அதிமுக எனும் பெயரையும், கட்சி சின்னத்தையும் பயன்படுத்த இருதரப்பினருக்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இதனால், இருவருக்கும் வெவ்வேறு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பணம் அதிகளவு விநியோகம் செய்யப்பட்டதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து ஏப்ரல் 10 -இல் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் அளித்ததாக டிடிவி தினகரன் கைது என அடுத்தடுத்து பல அதிரடிகள் அரங்கேறின.
இந்த சம்பவங்களுக்கு நடுவே, சசிகலா குடும்பத்தினரை கட்சி, ஆட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக எடப்பாடி கே.பழனிசாமி அணியினர் அறிவித்தனர். இந்த அறிவிப்புக்குப் பிறகே டிடிவி தினகரன் கைது சம்பவம் அரங்கேறியது. இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் டிடிவி தினகரன், ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைந்தன. அதில், ஓ.பன்னீர்செல்வம் தமிழக துணை முதல்வராகவும், அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும் பொறுப்பேற்றார். அணிகள் இணைந்த விவரங்கள் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் 23-ம் தேதி தேர்தல் ஆணையம் அதிமுக எனும் கட்சியின் பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கியது.
இதையடுத்து, மறுநாளே ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. டிசம்பர் 21ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.