சட்டப்பேரவையில் திறக்கப்பட்டுள்ள ஜெயலலிதா படத்தை அகற்ற கோரி உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு செய்துள்ளது.சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சார்பில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதில், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பு வருவதற்கு முன்னதாக ஜெயலலிதா இறந்துவிட்ட நிலையில், இந்த வழக்கில் மற்ற குற்றவாளிகளான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.


ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்டுள்ள மெரினாவில் நினைவகம் அமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவிற்கு நினைவகம் அமைக்க கூடாது மற்றும் அரசு அலுவலகங்களில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைக்க கூடாது என தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.



இதற்கிடையே இன்று எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளையும் மீறி ஜெயலலிதாவின் உருவப்படம், சட்டப்பேரவையில் திறக்கப்பட்டது. இந்த படத்திறப்பு விழாவை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.


இந்நிலையில், ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டப்பேரவையில் திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியிடம் திமுக சார்பில் முறையீடப்பட்டுள்ளது. திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சார்பில் வழக்கறிஞர் வில்சன் முறையிட்டார். படத்திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.