திருச்சி - மும்பை வழியாக தில்லிக்கு விமான சேவை: ஜெட் ஏர்வேஸ்!
டெல்லியிலிருந்து திருச்சிக்கு விரைவில் விமான சேவையை தொடங்குவதற்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
திருச்சி: புதுடெல்லியிலிருந்து திருச்சி வழியாக மும்பைக்குச் செல்லும் புதிய விமான சேவையை வரும் மார்ச் 25 முதல் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தொடங்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லியிலிருந்து மும்பைக்கு தினசரி விமானப் போக்குவரத்து சேவையை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இயக்கிவருகிறது. இதை திருச்சி வழியாக மாற்றியமைக்கும் புதிய திட்டத்தை அந்நிறுவனம் செயல்படுத்த உள்ளது. புதுடெல்லியிலிருந்து வரும் விமானம் திருச்சிக்கு தினமும் பிற்பகல் 2 மணிக்கு வந்து சேரும்.
பிறகு, திருச்சியிலிருந்து 2.30-மணிக்கு புறப்பட்டு, மும்பைக்கு மாலை 4.40-மணிக்குச் சென்று சேரும். இந்தச் சேவையை வரும் மார்ச் 25 முதல் செயல்படுத்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் முடிவுசெய்துள்ளது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, ஜனவரி 16-ம் தேதி முதல் சவூதி தமாம்மிலிருந்து திருச்சி, கோவை மற்றும் மதுரைக்கு தினசரி விமான சேவையை, ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது. இதேபோல, சென்னையிலிருந்து திருச்சி, கோவை, மதுரைக்கு ஏர் இந்தியா நிறுவனம் புதிய விமான சேவையை கடந்த ஆகஸ்ட் 30-ந்தேதி தொடங்கியது.
திருச்சியிலிருந்து மலேசியா செல்லும் விமான சேவை மார்ச் 24-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது என ஏர் ஏசியா நிறுவனமும், திருச்சி - பாங்காங் இடையேயான விமான போக்குவரத்து சேவையை தாய் ஏர் ஏசியா நிறுவனமும், இந்த மாத இறுதியுடன் வணிகக் காரணங்களுக்காக ரத்துசெய்வதாக அறிவித்துள்ளது.