நடிகர் கமல்ஹாசன், இன்று தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார். புதிய கட்சி, கொடி, கொள்கை அறிவிப்பு என அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கும் அவர், தனது வாழ்க்கையின் முக்கியமான தருணத்தில் இருப்பதாக உணர்ச்சி வசப்பட்டு தெரிவித்திருக்கிறார். இன்றைய அவரது திட்டம் குறித்து தெரிந்துகொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஓட்டு போடத்தொடங்கிய நாளில் இருந்தே அரசியலில் இருப்பதாக சொல்பவர் கமல்ஹாசன். ஆயினும், ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அவர் வெளிப்படையாக அரசியல் கருத்துகளை கூறி வந்தார். ட்விட்டரில் கருத்துகளை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்த கமல்ஹாசன், இன்று புதிதாக ஒரு அரசியல் கட்சியை தொடங்குகிறார். 


இதற்காக இரண்டுநாள் பயணமாக மதுரை சென்றுள்ள கமல்ஹாசன், நேற்று பகல் ஒருமணி அளவில் மதுரை விமானநிலையத்திற்குச் சென்றார். அங்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கமல், தனது வாழ்க்கையின் முக்கிய தருணத்தில் இருப்பதாக கூறினார்.


மதுரை ஒத்தக்கடை வேளாண் கல்லூரி எதிரே உள்ள திடலில் கமல்ஹாசனின் கட்சி பொதுக்கூட்டத்திற்கான மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேடையின் பின்புறம் பிரம்மாண்டமான எல்.இடி சுவர் அமைக்கப்படுகிறது. விளக்கு அலங்காரப் பணிகள், பார்வையாளர் அமரும் இடங்கள், வாகனங்கள் நிறுத்துமிடம் என பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.


இன்று மாலை 5 மணிக்கு கட்சி பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்கு வரும் கமல்ஹாசன் 6 மணி அளவில் அங்கு அமைக்கப்பட்டுள்ள 40 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றுகிறார். இந்த கூட்டத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.


முன்னதாக காலை 7. 45 மணி அளவில் அப்துல்கலாம் இல்லத்திற்கு வரும் கமல் 8.15 மணிக்கு கலாம் படித்த பள்ளியில் மாணவர்களை சந்தித்து உரையாடுகிறார். 8.50 மணி அளவில் அங்குள்ள திருமண மண்டபத்தில் மீனவர்களை சந்திக்கும் கமல், 11 மணி அளவில் அப்துல் கலாம் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்துகிறார். 


இதனைத்தொடர்ந்து மதுரை வரும் வழியில் ராமநாதபுரம் அரண்மனை நுழைவாயில், பரமக்குடி ஐந்துமுனை சாலை, மானாமதுரை ஆகிய இடங்களில் பொதுமக்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசுகிறார். இதனைத்தொடர்ந்து மதுரையில் மாலை 5 மணி அளவில் தொடங்கும் கட்சியின் முதல் கூட்டத்தில் பங்கேற்று கமல்ஹாசன் தனது கட்சியின் பெயர், கொள்கைகளை அறிவிக்கிறார்.