கனிமொழி தலைமையில் சென்னை துறைமுகத்தில் ஆர்ப்பாட்டம்!
தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்காத அதிமுக அரசைக் கண்டித்து சென்னை துறைமுகப் பகுதியில் கனிமொழி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்காத அதிமுக அரசைக் கண்டித்து சென்னை துறைமுகப் பகுதியில் கனிமொழி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் தண்ணீர் பஞ்சம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்ட நிலையில், சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னை நகரவாசிகள் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். சென்னை நகரம் கிட்டத்தட்ட 200 நாட்கள் வானம் பார்த்த பூமியாக இருப்பதாலும், வெயில் சுட்டெரிப்பதாலும் நீர் நிலைகள் வறண்டுவிட்டன. குறிப்பாக சென்னையில் முக்கிய குடிநீர் ஆதாரங்களான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்டு போய்விட்டன.
சென்னை முழுவதும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டு நிலவி வரும் நிலையில், பல இடங்களில் உணவகங்கள் மற்றும் ஐடி நிறுவனங்கள் முடக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன. தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பஞ்சத்தை போக்க அரசு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வளியுறுத்தி வருகின்றனர்.
எனினும் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர், தண்ணீர் வறட்சி ஏதும் இல்லை, எல்லாம் வதந்திதான் என தெரிவித்து வருகிறார். ஆனால் மக்களோ தினந்தோறும் தண்ணீருக்காக அல்லல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தண்ணீர் பிரச்னையை போக்க நடவடிக்கை எடுக்காத எடப்பாடியின் அதிமுக அரசைக் கண்டித்து தமிழகமெங்கும் மாவட்ட தலைநகரங்களில் திமுக தலைவர் முக ஸ்டாலினின் உத்தரவின் பேரில் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை துறைமுகப் பகுதியில் திமுக நாடாளுமன்றக் குழு துணைத்தலைவர் கனிமொழி தலைமையில் திமுக கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களும் எழுப்பப்பட்டது.
குடிநீர் வாரியத்தை முற்றுகையிட்டும் திமுக கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், போராட்டத்தில் மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் தயாநிதிமாறன் கலந்துகொண்டார்.