மீனவர் விவகாரம்: மத்திய, மாநில அரசை கண்டித்து 16-ம் தேதி பா.ம.க போராட்டம்
ஒக்கிப் புயலில் சிக்கிய கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களைக் காப்பாற்றும் விஷயத்தில் தவறிய மத்திய, மாநில அரசுகள் கண்டித்து வரும் 16-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை கூறியதாவது:
ஒக்கிப் புயலில் சிக்கிய கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களைக் காப்பாற்றும் விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் காட்டிய அலட்சியமும், இழைத்த துரோகமும் அளவிட முடியாதவை ஆகும். ஒரு தவறும் செய்யாத அப்பாவி மீனவர்களின் உயிரிழப்புக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் நீரோடி, தூத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடலுக்குச் சென்றவர்களில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்களின் கதி என்னவென்றே தெரியவில்லை. காணாமல் போனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் தொடக்கம் முதலே எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாறாக, கொண்டாட்டங்களிலும், குதூகலிப்புகளிலும் தான் ஆட்சியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். மிகவும் எளிதாகக் காப்பாற்றப்பட்டிருக்க வேண்டிய மீனவர்களை இறப்பை நோக்கி தள்ளிய பெரும் பாவம் மத்திய, மாநில அரசுகளையே சாரும். தமிழகத்தில் எந்த தரப்பினருக்கு பாதிப்பு என்றாலும், எதையும் எதிர்பார்க்காமல் ஓடோடி வந்து உதவும் குணம் கொண்டவர்கள் மீனவச் சொந்தங்கள்.
ஆனால், அவர்களின் சொந்தங்கள் ஒக்கிப் புயலில் சிக்கி, கடலில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், தங்களுக்கு உதவ அரசாங்கமே இல்லையோ? என்ற வெறுப்பும், சலிப்பும் ஏற்படும் அளவுக்குத் தான் அரசின் செயல்பாடுகள் இருந்தன.
கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் விஷயத்தில் தொடக்கம் முதல் இன்று வரை எந்தக் கட்டத்திலும் தமிழக அரசு முறையாக செயல்படவில்லை. மாறாக, ஒவ்வொரு கட்டத்திலும் செய்ய வேண்டியவற்றை செய்யத் தவறியதன் மூலம் மிகப்பெரிய துரோகங்களை மட்டுமே ஆட்சியாளர்கள் செய்தனர். மீனவச் சொந்தங்களுக்கு தமிழக ஆட்சியாளர்கள் செய்த துரோகங்களை பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது.
* ஒக்கிப் புயல் கன்னியாகுமரி மாவட்டத்தை நவம்பர் 29&ஆம் தேதி தாக்கிய நிலையில் அதற்கு சில நாட்கள் முன்பே மீனவர்களுக்கான முன்னெச்சரிக்கையை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், எந்த அறிவிப்பும் வெளியிடாததால் தான் மீனவர்கள் கடலுக்குச் சென்று புயலில் சிக்கிக்கொண்டனர்.
* ஒக்கிப் புயல் தாக்கியதற்கு அடுத்த நாளே கடலோரக் காவல்படை மற்றும் கடற்படையினரை கடலுக்கு அனுப்பி தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தியிருந்தால் மீனவர்களைக் காப்பாற்றியிருக்கலாம். ஆனால், தமிழக ஆட்சியாளர்களோ கோவையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மீனவர்களை மீட்கும் பணிகளை முடுக்கி விடுவதற்காக கன்னியாகுமரி செல்ல வேண்டும் என்ற கோரிக்கைகளை பினாமி முதல்வர் காதில் வாங்கவில்லை.
* கேரளத்தில் கடற்படை மற்றும் கடலோரக் காவல்படை அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்திய அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை விரைவுபடுத்தினார். ஆனால், ஒக்கிப் புயல் தாக்கி 10 நாட்கள் வரை இச்சிக்கல் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியதைத் தவிர வேறு எதையும் பினாமி முதல்வர் செய்யவில்லை.
* மீனவர்களை மீட்க வேண்டும் என்று மீனவர்களும், பொதுமக்களும் போராட்டம் நடத்திய நிலையில், அவர்களுடன் பேச்சு நடத்தி சமாதானப்படுத்த வேண்டிய அரசு, கிறித்தவப் பாதிரியார்கள் மீதும், மீனவர்கள் மீதும் வன்முறையை தூண்டியதாக பொய்வழக்குப் பதிவு செய்து மிரட்டி வருகிறது.
* எத்தனை இடர்கள் வந்தாலும் நமது அரசு நம்மைக் காக்கும் என்ற நம்பிக்கையை மக்களிடம் விதைக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். ஆனால், தமிழக அரசு மீது நம்பிக்கை இழந்த மீனவக் குடும்பங்கள் கேரள முதலமைச்சரை சந்தித்து தங்கள் சொந்தங்களை மீட்டுத் தரும்படி கோரிக்கை விடுத்தனர். அதன்பின் குமரி மாவட்டத்தை கேரளத்துடன் இணைத்து விடும்படி மீனவர்கள் போராட்டம் நடத்தினர். தமிழக அரசு தங்களைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையை தமிழக மக்களே இழந்து விட்டதை விட பெரிய அவமானம் தமிழக அரசுக்கு இல்லை. இதற்குப் பிறகும் தமிழக ஆட்சியாளர்கள் பதவியில் நீடிப்பது மிகப்பெரிய இழுக்கு ஆகும்.
* கேரள முதலமைச்சர் பாதிக்கப்பட்ட மக்களுடன் மக்களாக இருந்த நிலையில் தமிழக முதலமைச்சர் 14 நாட்களுக்குப் பிறகு நேற்று தான் குமரி மாவட்டம் சென்றுள்ளார். அங்கும் கூட மக்களை சந்தித்து குறைகளைக் கேட்காமல், அவர்களை அடைத்து வைத்து உரையாடி விட்டு வந்துள்ளார்.
* முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பயணம் நம்பிக்கையையும், ஆறுதலையும் ஏற்படுத்துவதற்கு பதிலாக மீனவ மக்களிடையே எரிச்சலையும், வெறுப்பையும் மட்டுமே ஏற்படுத்தியிருக்கிறது.
கடலுக்குச் சென்ற மீனவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்ட நிலையில் மீதமுள்ள மீனவர்களையாவது உயிருடன் மீட்க அரசு எந்த உத்தரவாதத்தையும் வழங்கவில்லை. மொத்தத்தில் மீனவர்களின் துயரைத் தீர்க்க ஆட்சியாளர்கள் தயாராக இல்லை என்பதையே அரசின் செயல்பாடுகள் மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றன.
எனவே, மீனவர்களைக் காப்பாற்றத் தவறிய தமிழக அரசைக் கண்டித்தும், இம்மாத இறுதிக்குள் கரை திரும்பாத மீனவர்களை உயிரிழந்தவர்களாக அறிவித்து அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு மற்றும் தகுதிக்கேற்ற அரசு வேலை வழங்க வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் 16-ம் தேதி தமிழகத்தின் 32 மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.