பெரியாருக்கும் தமிழில் வாழ்த்து தெரிவித்த கேரள முதல்வர்!
பெரியாரின் 143வது பிறந்தநாளான இன்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.
சமூக நீதி காத்த தந்தை பெரியாரின் 143 வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் முதல் பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என தமிழ்க முதல்வர் முக. ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார். இன்று பெரியாருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் பெரியாருக்கு தமிழில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
"பெரியாரின் பிறந்த நாளில் அவருக்கு வணக்கத்தை உரித்தாக்குகிறோம். சமூக நீதி,சாதி ஒழிப்பு மற்றும் மத நல்லிணக்கம் ஆகியவற்றுக்கான போராட்டங்கள் அதிகமாக தேவைப்படும் இக்காலகட்டத்தில் அவர் வழியில் நாமும் அன்பால் நிறைந்த உலகை உருவாக்க உறுதி கொள்வோம்" என டிவிட்டரில் கூறியுள்ளார்.
மேலும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி , “ சுதந்திரம், தைரியம், சமத்துவம் என்ற பெரியாரின் கருத்துகளை, அவரின் பிறந்தநாளில் நினைவுகூர்வோம்” என பதிவிட்டு “ எந்த ஒரு கருத்தினையும் மறுப்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு, ஆனால் அந்த வெளிப்பாட்டை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை” என்ற வாசகத்தையும் பகிர்ந்துள்ளார்.
பெரியாரின் படத்திற்கு மாலை அணிவித்த முக. ஸ்டாலின் " தமிழினத்துக்குத் தொண்டு செய்யவே வாழ்ந்த தந்தை பெரியாரின் பிறந்தநாளாம் இன்று முதல்முறையாக #சமூகநீதிநாள் உறுதிமொழி ஏற்றேன். தமிழ்நாடு முழுவதும் பலரும் என்னுடன் இந்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டுள்ளனர். உயர்வுதாழ்வில்லாச் சமத்துவச் சமுதாயம் நோக்கிய நமது பயணம் தொடரும்; வெல்லும்!" என்று கூறியிருந்தார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR