Live Update: இன்றைய முக்கிய செய்திகள் (2022 மே 20)
தமிழ்நாட்டின் இன்றைய (2022 மே 20) இன்றைய முக்கிய நிகழ்வுகள் உடனுக்குடனே...
Latest Updates
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தென்கலையினர் மட்டும் பிரபந்தம் பாட அனுமதித்த உதவி ஆணையர் உத்தரவையும், வடகலை பிரிவினரும் பாட அனுமதித்த தனி நீதிபதி உத்தரவையும் நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவின் வேட்பாளர்கள் யார்? நீடிக்கும் குழப்பம்
மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு இருக்கும் இரண்டு இடங்களை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தங்களது ஆதரவாளர்களுக்காக பிரித்துக்கொண்டனர். அப்படி பிரித்துக்கொண்ட போதும் வேட்பாளர்களை அறிவிக்க இருதரப்பும் முடிவெடுக்க முடியாத சூழ்நிலையே நீடிக்கிறது. எடப்பாடி பழனிசாமி கோட்டாவில் உள்ள ஒரு சீட்டை எனக்கு தாருங்கள் என முக்கிய நிர்வாகிகள் பலரும் அவரை அணுகி கோரிக்கை வைத்துள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் ஜெயகுமார், சி.வி.சண்முகம் மற்றும் செம்மலை ஆகியோர் மட்டுமே இறுதி பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இரு வேட்பாளர்களில் ஒரு இடத்தை புதியவர்களுக்கு கொடுப்பதன் மூலம் எதிர்ப்பையும் சமாளித்து விட முடியும் என அதிமுக தலைமை நினைப்பதாக சில மூத்த நிர்வாகிகளே தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
பேரறிவாளன் விடுதலையை கொண்டாடுபவர்கள் வக்ரபுத்திக்காரர்கள் - முன்னாள் முதல்வர் நாராயணசாமி
ராஜீவ்காந்தி கொலையாளிகளை அக்குடும்பத்தினர் மன்னித்தாலும் நாங்கள் மன்னிக்க மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்த புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, பேரறிவாளன் விடுதலைக்கு இனிப்பு வழங்கி பட்டாசு வெடிப்பது மனவேதனையை அளிக்கின்றது என்றும், முன்னாள் பிரதமரை கொன்றவர்களின் விடுதலையை கொண்டாடுவது அவர்களின் வக்ரபுத்தியை காட்டுகிறது என்றும் கூறினார்.
தங்கம் வெள்ளி விலை நிலவரம்:
இன்று காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,786 ஆக அதிகரித்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 248 ரூபாய் அதிகரித்து 38,288 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் 18 காரட் தங்கம் ரூ. 3,920-க்கு விற்பனையில் உள்ளது.
வெள்ளி கிராமுக்கு ரூ. 65.90-க்கும், ஒரு கிலோ ரூ. 65,900-க்கும் விற்பனையாகிறது.
கிடுகிடுவென அதிகரிக்கும் தக்காளி விலை
தக்காளி வரத்து குறைவு காரணமாக தக்காளியின் விலை 90 ரூபாயை எட்டியுள்ளது.
கோடைமழையால் எதிர்வரும் நாட்களில் தக்காளி விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கல்குவாரி விபத்து இழப்பீடு கோரும் பாஜக ஆர்ப்பாட்டம்
நெல்லை முன்னீர்பள்ளம் கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு கோருகிறது பாரதிய ஜனதா கட்சி.
இதை வலியுறுத்தி தமிழக பாஜக சார்பில் இன்று நெல்லையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது
ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு
தமிழகத்தில் நூல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தி கோவை , திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.
எதிர்வரும் 22 ஆம் தேதி முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு முழுமையாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.
உதகை 124-வது மலர் கண்காட்சி இன்று தொடக்கம்
நீலகிரி மாவட்ட கோடைவிழாவின் ஒருபகுதியாக பிரசித்தி பெற்ற உதகை மலர்க் கண்காட்சி தொடங்குகிறது. உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 124-வது மலர்க் கண்காட்சியை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
காலை 10 மணிக்கு நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள் உட்பட பல பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.
எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு
எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 3 ரூபாய் அதிகரித்தது. வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 8 ரூபாய் உயர்ந்துள்ளது.
மாநிலங்களவை தேர்தலில் பாஜக மற்றும் பாமகவிடம் ஆதரவு கோரும் அதிமுக
அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் மாநிலங்களவை தேர்தலில் பாஜக மற்றும் பாமகவிடம் ஆதரவு கோருகிறது அதிமுக.
2 இடங்களில் வெற்றி பெற மொத்தம் 68 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் அதிமுகவிடம் 66 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளதால், 2 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.
இந்த நிலையில், 4 எம்எல்ஏக்கள் கொண்ட பாஜகவின் ஆதரவைப் பெற அதிமுக முடிவு செய்துள்ளது.