தமிழகத்தில் வாக்காளர் வரையறை பணி முடிந்துள்ள நிலையில் வரும் ஆகஸ்டு மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவி காலம் 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முடிவடைந்தது. அதன்பின்னர் மீண்டும் தேர்தலை நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்தது.


உள்ளாட்சி தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்ட நிலையில் உள்ளாட்சி தேர்தலில் பழங்குடி இனத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரி திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிரப்பித்தது.


இட ஒதுக்கீடு பிரச்சினையை சரி செய்த பின்னரும் தேர்தல் நடைபெறாமல் தள்ளிப்போனது. இதுபற்றி நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறும்போது, வார்டு மறுவரையறை பணிகள் நடைபெறுவதாகவும், அந்த பணிகள் நிறைவுற்றதும் உள்ளாட்சி தேர்தலை நடத்தபோவதாகவும் அறிவித்தது. அதன் பின்னரும் பல்வேறு காரணங்களால் உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போனது.


இந்நிலையில் தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என சமீபத்தில் திமுக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது 3 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


எனினும் தேர்தல் ஆணையம் சார்பில் சார்பில் பதில் அளித்து தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், வாக்காளர் பட்டியல் முழுமையாக தயார் செய்ய வேண்டி உள்ளது. இந்த நடைமுறை முடிந்த பிறகே உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியும் என்றும் தற்போது பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு முழுமை பெறவில்லை. எனவே உடனே உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாது என்று கூறியது.


இந்நிலையில் நேற்று உள்ளாட்சி தேர்தலுக்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கி உள்ளது. வாக்காளர் பட்டியல் தயாரிப்புக்கான வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, மக்களவை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர்பட்டியல் சட்டமன்றம் வாரியாக தயார் நிலையில் உள்ளதால் அதை வார்டு வாரியாக பிரிக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. எனவே விரைவில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்களவை தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை வரும் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. அதன் பின்னர் அடுத்த மாதம் சட்டசபை கூடும் என்பதால் ஜூன் மாதம் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாது.


மானியக்கோரிக்கை மீதான விவாதம் 25 நாட்கள் நடைபெறும் என்பதால் ஜூலை மாதம் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பணிகள் தொடங்கிவிடும். எனவே, ஆகஸ்டு மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றது.