தமிழ்நாடு அரசுத்துறைகளில் ஊழலும், கையூட்டும் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஊழல் அதிகாரிகளை ஏன் குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கூடாது? என்று வினா எழுப்பியிருக்கிறது. இதனையடுத்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா மற்றும் சேவை உரிமை மசோதாக்களை நிறைவேற்ற வேண்டும் என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-


தமிழ்நாடு அரசுத்துறைகளில் ஊழலும், கையூட்டும் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஊழல் அதிகாரிகளை ஏன் குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கூடாது? என்று வினா எழுப்பியிருக்கிறது. அரசுத் துறைகளில் நிலவும் ஊழல் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் நீதிமன்றங்களில் எந்த அளவுக்கு கொந்தளிப்பு நிலவுகிறது என்பதையே இந்த வினா காட்டுகிறது.


பத்திரப்பதிவு அலுவலகங்களில் நிலவும் ஊழல் தொடர்பான வழக்கு விசாரனையின் போது இவ்வாறு வினா எழுப்பிய நீதிபதி கிருபாகரன், அரசுத் துறைகளில் நிலவும் ஊழல்கள், ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், ஊழலை ஒட்டுமொத்தமாக ஒழிக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவை குறித்து எண்ணற்ற வினாக்களை எழுப்பியிருக்கிறார். நேர்மையான அதிகாரிகள் பாராட்டி ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதைப் போலவே, தவறு செய்யும் அதிகாரிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. 


ஊழல் செய்யும் அதிகாரிகளை தண்டிப்பதற்கு முன் அதற்கான வழிமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கெல்லாம் மேலாக ஊழல் ஒழிப்பு கீழிருந்து மேலாக செல்வதற்கு பதிலாக மேலிருந்து, அதாவது முதலமைச்சர், அமைச்சர்கள் நிலையிலிருந்து கீழ்நோக்கி, அதாவது அதிகாரிகளை நோக்கி பயணிக்க வேண்டும்.


ஆட்சித் தலைமை தூய்மையாக இருந்தால் அதிகாரிகள் மத்தியில் ஊழல் நடக்க வாய்ப்பே இல்லை. ஓமந்தூரார் ஆட்சியிலோ, காமராசர் ஆட்சியிலோ அரசு நிர்வாகத்தில் ஊழல் இல்லை. அதற்குக் காரணம் ஓமந்தூராரும், காமராசரும் நேர்மையாக இருந்ததால் தான் அவர்கள் ஆட்சியும் ஊழல் கறைபடியாததாக இருந்தது. 


அண்ணாவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் தங்களுக்கென வருவாய் ஈட்டிக்கொள்ள அரசு நிர்வாகத்தில் ஊழல் விதையை விதைத்தனர். ஆட்சியாளர்களைப் போலவே அதிகாரிகளும் ஊழலை வளர்த்தெடுத்தனர். அதன் விளைவாக இப்போது ஊழல் பெரும் காடாக பரந்து விரிந்திருக்கிறது.


இன்றைய நிலையில் அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்பதற்கான ஒரே வழி லோக்அயுக்தா அமைப்பை உருவாக்குவதும், சேவை பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றி செயல்படுத்துவதும் தான். லோக் அயுக்தா அமைப்பும், சேவை பெறும் உரிமைச் சட்டமும் இந்தியாவில் 21 மாநிலங்களில் நடைமுறையில் உள்ளன. 


தன்னாட்சி அதிகாரம் பெற்ற லோக் அயுக்தா அமைப்பை சிறப்புச் சட்டத்தின் மூலம் உருவாக்கி, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை அதன் விசாரணை வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். அதிகாரிகள் முதல் முதலமைச்சர் வரை யார் மீது ஊழல் குற்றச்சாற்றுகள் பதிவு செய்யப்பட்டாலும் அதை 6 மாதங்களில் விசாரித்துத் தீர்ப்பு சொல்வதன் மூலம் ஊழலைக் கட்டுப்படுத்த முடியும். அதுமட்டுமின்றி, மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர்களும், துறைகள் அளவில் அவற்றின் செயலாளர்களும் ஊழல் ஒழிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட வேண்டும். அவர்களின் அதிகார வரம்புக்குட்பட்ட அலுவலகங்களில் ஊழல்கள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டால் அதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.


அரசு அலுவலகங்களில் ஊழல்கள் உருவாகக் காரணம் பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டிய சேவைகள் குறித்த காலத்தில் வழங்கப்படாதது தான். பிறப்புச்சான்றிதழ், குடும்ப அட்டை போன்ற அடிப்படை உரிமைகள் குறித்த காலத்தில் வழங்கப்படாத போது, அதை எப்படியாவது பெறத் துடிக்கும் மக்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி தான் கையூட்டு வசூலிக்கப்படுகிறது. இதைத் தடுப்பது தான் பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கமாகும். 


இச்சட்டத்தின்படி மக்கள் கோரும் அனைத்துச் சேவைகளும் குறிப்பிட்ட நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும்; அவ்வாறு வழங்கப்படாவிட்டால் அது சம்பந்தப்பட்ட அதிகாரியின் கடமை தவறிய செயலாகக் கருதப்பட்டு தண்டம் விதிக்கப்படும் என்பதால் மக்களுக்கான சேவைகள் குறித்த நேரத்தில் கிடைக்க வழி ஏற்படும். இதனால் ஊழல் ஒழிக்கப்படும்.


ஆனால், ஊழல் ஒழிந்து விடக்கூடாது என்று நினைக்கும் தமிழகத்தின் இரு திராவிடக் கட்சிகளும் இதற்குக் தடையாக உள்ளன. லோக் அயுக்தா அமைப்பு 1971-ஆண்டு முதல் 47 ஆண்டுகளாகவும், பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் 2010-ஆம் ஆண்டு முதல் 8 ஆண்டுகளாகவும் பல மாநிலங்களில் நடைமுறையில் உள்ளன. இந்த இரு சட்டங்களையும் தமிழகத்திலும் கொண்டு வர வேண்டும் என்று கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வரும் போதிலும், அதை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை. காரணம்... ஊழலை ஒழிப்பதில் அவர்களுக்கு விருப்பமில்லை.


அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் லோக் அயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து 20 மாதங்களாகியும் லோக் அயுக்தா சட்டத்தை நிறைவேற்ற எந்த முயற்சியும் மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது. 


தமிழகத்தில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற அக்கறை தமிழக ஆட்சியாளர்களுக்கு இருந்தால் லோக்அயுக்தா சட்ட முன்வடிவையும், பொதுச் சேவை பெறும் உரிமைச் சட்ட முன்வடிவையும் அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.


இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.