தமிழகத்தில் அதிமுக என்ற உதவாக்கரை ஆட்சி நடைபெற்று வருகிறது: மு.க. ஸ்டாலின் தாக்கு
மதுரை நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
நாடு முழுவதும் மக்களவையின் இரண்டாம் கட்ட தேர்தல் தமிழகம், புதுச்சேரி உட்பட 13 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் என மொத்தம் 97 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிக்களுக்கான வேட்புமனுத் தாக்கல் முடிந்து, வேட்புமனு பரிசீலனை முடிந்தது. நாளை இறுதி வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது.
கடந்த மார்ச் 20 ஆம் தேதி முதல் மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக, அதன் கூட்டணி கட்சிகளை ஆதரித்து திருவாரூரில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்கி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இன்று மதுரையில் தேர்தல் பிரசாரத்தில் கலந்துக்கொண்டார். அப்பொழுது மதுரை நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
தேர்தலில் வெற்றி பெற்றால் திமுக மக்களுக்கு செய்யும் நன்மைகளை பட்டியலிட்ட ஸ்டாலின், அதிமுக மற்றும் பாஜக-வை கடுமையாக தாக்கி பேசினார். அப்பொழுது அவர் பேசியதாவது, தமிழகத்தில் அதிமுக என்ற உதவாக்கரை ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு சீரழிந்து விட்டது. ஒருபுறம் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்படுகிறார்கள். மறுபுறம் கெட்டுப்போன ரத்தம் ஏற்றப்பட்டதால் 15 கர்ப்பிணிகள் உயிரிழந்துள்ளனர். அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
மத்தியில் மோடியின் ஆட்சியில் இந்தியா வளர்ச்சி அடையவில்லை. தளர்ச்சிதான் அடைந்துள்ளது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவோம் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். எங்கே போனது வேலை வாய்ப்பு பிரதமர் மோடி அவர்களே? மோடி ஆட்சியில் தான் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் ஏற்ப்பட்டு உள்ளது.
அண்மையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டி விட்டுச்சென்றார் பிரதமர். அடிக்கல் நாட்டினால் போதுமா? அதற்கு நிதி ஒதுக்க வேண்டாமா? இது மக்களை ஏமாற்றும் வேலை. அவர் ஒன்றும் செய்யமாட்டார்.
மதுரை மண்ணின் பெருமையை தோழர் சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் எடுத்துரைப்பார். கீழடி பெருமையை உலகுக்கு எடுத்துச் சொன்னவர். தமிழக எழுத்தாளர். மதுரையை காப்பாற்ற வேண்டும், மதுரைக்கு பெருமையை சேர்க்க வேண்டும் என நினைத்துக்கொண்டு இருப்பவர். இந்த மதுரை மண்ணில் இருந்து சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்திற்கு செல்வது மதுரைக்கே பெருமை. அவரை ஆதரியுங்கள்.
இவ்வாறு மு.க. ஸ்டாலின் கூறினார்.