சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமாணி தனது ராஜினாமாவை சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உச்சநீதிமன்றம் கொலீஜியம் அவரை மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரைத்த நிலையில் இந்த அதிரடி முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது.


சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதை அடுத்து, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மும்பை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.


இந்நிலையில், கடந்த வாரம் தஹில் ரமானியை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க, கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. 


இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான கொலிஜியம் அமைப்பு, நீதிபதிகள் நியமனம், இடமாற்றம் தொடர்பான முடிவுகளை எடுத்துள்ளது. அதன்படி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ள மணிக்குமாரை, கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கவும் கொலிஜியம் பரிந்துரைத்தது. மேலும், உச்ச நீதிமன்றத்துக்கு பல உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கவும் பரிந்துரை செய்துள்ளது.


இந்தியாவின் மிகப் பழமையான நீதிமன்றங்களில் ஒன்றான சென்னை உயர் நீதிமன்றத்தில் 75 நீதிபதிகள் (தலைமை நீதிபதியை சேர்த்து) பணியிடங்கள் உள்ளன. தற்போது 60 நீதிபதிகள் பணியில் உள்ளனர். மீதமுள்ள பணியிடங்கள் காலியாக உள்ளது.


எனினும், 2013-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மேகாலயா உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியை சேர்த்து மொத்தமே 3 நீதிபதிகள்தான் உள்ளனர். மிகப்பெரிய நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக உள்ள ஒருவர் சிறிய நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவது அசாதாரணமானது என சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். நீதித்துறையில் பணியிட மாற்றம் என்பது நிர்வாகம் சார்ந்தது என்றாலும், தஹில் ரமானி எதற்காக பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளார் என்பது வெளிப்படுத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது தஹில் ரமாணி தனது ராஜினாமாவை சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


---நீதிபதி தஹில் ரமாணி---
மகாராஷ்டிரா மற்றும் கோவாவின் பார் கவுன்சிலில் இணைந்த பின்னர், நீதிபதி தஹில் ரமாணி புகழ்பெற்ற வழக்கறிஞரான அவரது தந்தை எல்.வி.காப்ஸேவின் அறையில் சேர்ந்தார். தனது தந்தை மறைவிற்கு பின்னர் அவர் பம்பாய் உயர் நீதிமன்றத்திலும், மும்பை நகர சிவில் மற்றும் அமர்வு நீதிமன்றத்திலும் சுயாதீனமான பயிற்சியைத் தொடங்கினார். 


1990-ஆம் ஆண்டில், அவர் பம்பாயில் உயர்நீதிமன்றத்தில் உதவி அரசாங்க பிளேடராகவும் கூடுதல் பொது வழக்கறிஞராகவும் நியமிக்கப்பட்டார். 1997-ஆம் ஆண்டில், அவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் அரசாங்க வாதி மற்றும் பொது வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 2001-இல் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்பட்டார். அதன்பிறகு, அவர் பம்பாய் உயர்நீதிமன்றத்தின் செயல் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் கடந்த ஆகஸ்ட் 2018-இல், அவர் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார்.