மதுரை சித்திரை திருவிழாவை காரணம் காட்டி தேர்தலை ஒத்திவைக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்களையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரும் ஏப்ரல் மாதம் 18-ஆம் நாள் மதுரையில் தேரோட்டம், மறுநாள் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா நடைபெறவுள்ளது. முன்னதாக தமிழகத்தில் அதே நாளில் மக்களவை தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சித்திரை திருவிழா-வினை காரணம் காட்டி மதுரை மக்களவை தேர்தலை தள்ளி வைக்க கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பார்த்தசாரதி என்பவர் மனு தாக்கல் செய்தார்.


இந்த மனுவை, நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. பின், இம்மனு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. 



நீதிபதிகள் மணிகுமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன், இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை தொகுதி தேர்தலை மாற்றுவதற்கு சாத்தியக்கூறு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் ஏப்ரல் 18-ஆம் தேதி, பெரிய வியாழன் வருவதால், கிறிஸ்துவ தேவாலயங்களை ஒட்டி உள்ள, பள்ளிகளில் அமைக்கப்படும் ஓட்டுச் சாவடிகளை மாற்ற வேண்டும். இல்லையெனில், தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் எனக்கோரி, தமிழ்நாடு பிஷப் கவுன்சில் தலைவர், பேராயர் அந்தோணி பப்புசாமி, கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின், நிர்வாக அறங்காவலர், இனிகோ இருதயராஜ், மனுக்கள் தாக்கல் செய்தனர். 


இந்த மனுவிற்கு தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில், 'தேர்தல் நடத்தும் போது, ஒருவரது மத வழிபாட்டு உரிமையில், எந்த குறுக்கீடும் செய்வது இல்லை. 'வழிபாட்டு தலங்களை அணுக, எந்த இடையூறும் ஏற்படாமல், தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என, குறிப்பிடப்பட்டது. இதனையடுத்து தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்று கொண்டு அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


முன்னதாக மதுரையில் வாக்குப்பதிவு நேரம் இரண்டு மணி நேரம் கூட்டி மாலை 7 மணி வரை நடைபெறும் என தேர்தல் அணையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.