குரூப்-3, குரூப்- 4 போன்ற அடிப்படை அரசுப் பணிகளுக்கு குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்சம் கல்வித்தகுதியை நிர்ணயிக்க உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், சக்கரைசாமி என்பவர் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்," டி.என்.பி.எஸ்.சி வருவாய்த்துறை உதவியாளர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை 2009ல் வெளியிட்டது. தான் பி.இ முடித்திருந்த நிலையில், அதற்கு விண்ணப்பித்து எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்றும் B.E முடித்திருப்பதால் கூடுதல் கல்வித்தகுதி எனக்கூறி என்னை நிராகரித்து விட்டனர். ஆகையால் அதனை ரத்து செய்து எனக்கு வருவாய்த்துறையில் உதவியாளர் பணி வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், " நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் பெருமளவில் உள்ளது. இதனால் பெரும்பாலான பட்டதாரிகள் குரூப் 4 உள்ளிட்ட அடிப்படை அரசுப்பணிகளுக்கு விண்ணப்பிக்கின்றனர். இவர்கள் கூடுதல் கல்வித்தகுதி உடையவர்களாய் இருக்கும் நிலையில், பணிக்குத் தேர்வான பின், அவர்கள் முறையாக பணியாற்றுவதில்லை.


கூடுதல் கல்வித்தகுதி என்பதால் அவர்களிடம் வேலை வாங்குவதில் அதிகாரிகளும் சிரமத்தை சந்திக்கிறார்கள். இது போன்ற சூழல் உயர்நீதிமன்றங்களிலும் உள்ளது. இரண்டாம் நிலை காவலர்களாகவும் பட்டதாரிகள் தேர்வாகின்றனர். அவ்வாறு தேர்வாகும் கூடுதல் கல்வித்தகுதி உடையோர், வேலை நேரம் உட்பட எப்போதும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராவதிலேயே முனைப்பு காட்டுகின்றனர். இதனால், பணிகளை முறையாகச் செய்வதில்லை என கூறி மனு தாரரின் மனுவை நிராகரித்தார்.


மேலும், நிர்வாகத்துறை முதன்மை செயலர், குரூப் 3, குரூப் 4 போன்ற அடிப்படை அரசுப் பணிகளுக்கான நபர்களைத் தேர்வு செய்வதற்கான வழிமுறைகளை மறு பரிசீலனை செய்து, குறைந்தபட்ச கல்வித்தகுதி மற்றும் அதிகபட்ச கல்வித்தகுதியை 12 வாரங்களில் நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும்,  இதன் மூலம் தகுதியுடைய நபர்கள் பொதுத்துறைகளில் தேர்வாக வாய்ப்பாக அமையும் என்றும் கூறி, வழக்கை முடித்துவைத்தார்.