தஞ்சாவூர் பெருவுடையார் திருக்கோவிலில், வாழும் கலை அமைப்பு நடத்தவிருந்த நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு சார்பில் நடத்தப்படும், 2 நாள் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என கும்பகோணத்தைச் சேர்ந்த வெங்கட் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். பழம்பெருமையும், பாரம்பரியமும் கொண்ட தஞ்சாவூர் கோவிலில் தனியார் அமைப்புகள் நிகழ்ச்சி நடத்தி கோவிலின் சிறப்பை பாதுகாக்க தவறுவது சம்பந்தப்பட்ட துறைகளால் அனுமதிக்கப்பட கூடாது என மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.


மேலும், நிகழ்ச்சியை நடத்தும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் 2017-ஆம் ஆண்டு யமுனை நதிக்கரையில் மாசினை ஏற்படுத்தும் விதமாக நிகழ்ச்சி நடத்தியதற்காக பசுமை தீர்ப்பாயத்தால் 5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டவர் என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, இந்த மனுவினை அவசர வழக்காக விசாரிப்பதோடு, வாழும் கலை அமைப்பின் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.


இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது வாழும் கலை அமைப்பின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தியான நிகழ்ச்சியை மட்டும் நடத்தவே அனுமதி பெறப்பட்டுள்ளது எனவும், கோவில் பிரகாரத்தில் பந்தல்கள் முழுவதுமாக அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அதற்கு நீதிபதிகள் தியான நிகழ்ச்சி எனில் அதற்கு மண்டபங்களை அணுகியிருக்கலாமே? பாரம்பரிய கோவிலினுள் நடத்த காரணமென்ன? என கேள்வி எழுப்பினர்.


தொடர்ந்து, பந்தல்களை அகற்றினால் எங்கு தியான நிகழ்ச்சியை நடத்துவீர்கள்? என நீதிபதிகள் வினவினர். அதற்கு வாழும் கலை அமைப்பு வழக்கறிஞர் கோவிலின் மூலையில் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு நடத்தபடும் என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கோவில்களில் தீ விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில் நிகழ்ந்து வரும் யுனெஸ்கோவால், பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட, ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் சிறப்பு நிகழ்சிகள் நடுத்துவது சரியல்ல என குறிப்பிட்டனர். இதைத்தொடர்ந்து வாழும் கலை அமைப்பு பெரிய கோவிலில் நடத்திவிருந்த ஆன்மிக நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள், உத்தரவிட்டனர். தொடர்ந்து வழக்கின் விசாரணையினை வரும் டிச., 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.