தமிழக வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க திமுக கூட்டணியில் இணைந்தது மதிமுக!
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உயர்நிலைக் குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம், இன்று 07.01.2018 ஞாயிற்றுக்கிழமை, தாயகத்நில், கழக அவைத்தலைவர் திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உயர்நிலைக் குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம், இன்று 07.01.2018 ஞாயிற்றுக்கிழமை, தாயகத்நில், கழக அவைத்தலைவர் திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-
தீர்மானம்: 1
திராவிட இயக்கத்தைக் காக்கவும், மாநில சுயாட்சிக் கொள்கைக்கு வலுவூட்டவும், தமிழக வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து செயல்படுவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கின்றது.
தீர்மானம்: 2
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடிக்கம்பங்களுக்குப் புதிய வண்ணம் தீட்டி, கழகக் கொடிகளை ஏற்றுகின்ற வகையில், ஜனவரி 14 ஆம் நாள் முதல் 31 ஆம் தேதி வரை, மாவட்டச் செயலாளர்கள் அதற்குரிய திட்டங்களை வகுத்து, மாநகரங்கள், நகரங்கள், ஒன்றியங்கள், பகுதிக் கழகங்கள், பேரூர்க் கழகங்கள் தோறும் கொடி ஏற்று விழாக்களை சிறப்பாக நடத்திடுவது என இக்கூட்டம் தீர்மானிக்கின்றது.
தீர்மானம்: 3
சென்னை இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு தகுதிநீக்கம் செய்து தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தால்தான் ஜனநாயகம் தழைக்கும். அதற்கான நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் விரைவில் மேற்கொள்ள வேண்டும் என மறுமலர்ச்சி தி.மு.க. வலியுறுத்துகின்றது.
தீர்மானம்: 4
கடந்த நவம்பர் 29, 30, 2017 இல் கன்னியாகுமரி மாவட்டத்தில் வீசிய வரலாறு காணாத ஒக்கி புயலால் அம்மாவட்டமே முற்றிலும் உருக்குலைந்துபோனது. தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களும் பாதிக்கப்பட்டன. எனவே புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை தேசியப் பேரிடர் மாவட்டமாக அறிவித்து, மத்திய - மாநில அரசுகள் முழு அளவில் மீனவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்; தமிழக அரசு பிரதமரிடம் கோரியுள்ள 13520 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.
தீர்மானம்: 5
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை, குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 என்று நிர்ணயிக்க வேண்டும் என்று தமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கின்றது.
தீர்மானம்: 6
தமிழக அரசு கரும்பு கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.4000மாக தீர்மானிக்க வேண்டும் என்றும்; கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.2000 கோடியை இந்த ஆண்டு பொங்கல் திருநாளுக்கு முன்பாகப் பெற்றுத்தர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.
தீர்மானம்: 7
வேளாண்மைப் பணிகளுக்குப் பயன்பட்டு வரும் டிராக்டர்களுக்கு இதுவரையில் வரி விதிப்பு இல்லை. பதிவுக் கட்டணமாக ரூ.50 மட்டுமே செலுத்தி வருகின்றனர். மத்திய அரசு மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்து, விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் டிராக்டரை வணிக பிரிவு வாகனமாக மாற்றி இருக்கின்றது. இதனால், வணிக வாகனங்களுக்கு இணையாக டிராக்டருக்கும் சாலை வரியாக ஆண்டுக்கு ரூ.650 விதிக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் சுமார் இரண்டு இலட்சம் டிராக்டர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. விவசாயிகளைப் பாதிக்கும் இந்த முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.
தீர்மானம்: 8
மூன்று ஆண்டுகள் தண்டனை என்ற விபரீதம் விளைவிக்கின்ற பிரிவுகளையும் சேர்த்து, முத்தலாக் தடைச் சட்டத்தைத் திணிக்க முயற்சிப்பதற்குக் கண்டனம் தெரிவிப்பதுடன், நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. வலியுறுத்துகின்றது.
தீர்மானம்: 9
உள்ளாட்சித் தேர்தலை நவம்பர் 17 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வரும் அதிமுக அரசு, தொகுதி வரையறை எனும் பெயரால் உள்ளாட்சி அமைப்புகளை சிதைக்கும் வேலையில் இறங்கிஉள்ளது.
தமிழ்நாடு தொகுதி வரையறைச் சட்டம் 2017 இன் படி, உள்ளாட்சித் தொகுதிகளை வரையறை செய்யும் பணியை மாநில தேர்தல் ஆணையமே நேரடியாக மேற்கொள்ள வேண்டும். ஆனால், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ளாட்சி தொகுதி வரையறை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும், ஜனவரி 2ஆம் தேதிக்குள் அரசியல் கட்சிகள் அதனை சரிபார்த்துக் கருத்துக் கூறலாம் என்று மாவட்ட ஆட்சியர்கள் டிசம்பர் 28 ஆம் தேதி அறிவித்தனர். மூன்று நாட்கள் கால அவகாசம் என்பது போதுமானது அல்ல. தற்போது உள்ளாட்சி வார்டுகள் வரையறை செய்யும் அதிகாரிகள் ஆளும் கட்சியினரின் விருப்பத்திற்கு ஏற்ப வார்டுகளைப் பிரித்தும், சேர்த்தும் வகைப்படுத்தி உள்ளனர். இத்தகைய முறைகேடுகளை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிப்பதுடன், உள்ளாட்சி வார்டுகள் வரையறையை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்; அரசியல் கட்சிகள், பொதுமக்கள் கருத்துக்களைப் பெற ஜனவரி 31 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.
தீர்மானம்: 10
சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 800க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் நேரடியாக சுமார் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்டோரும், பட்டாசு துணைத் தொழில்களான அச்சு, போக்குவரத்து உள்ளிட்ட தொழில்களில் மூன்று இலட்சத்துக்கு மேற்பட்டோரும் வேலைவாய்ப்புப் பெற்று வருகின்றனர். பண்டிகைகளின்போது பட்டாசு வெடிப்பதால் காற்று மற்றும் ஒலி மாசு புகார் தொடர்பாக நீதிமன்றங்களில் தொடரப்படும் வழக்குகளால் பட்டாசு விற்பனைக்குத் தடை விதிக்கப்படுகின்றது. இதனால் இத்தொழில் பெரும் சரிவைச் சந்தித்து வருகின்றது. உச்சநீதிமன்றமும் இது தொடர்பான வழக்கை விசாரணைக்கு ஏற்று, அனைத்து மாநில அரசுகளுக்கும் விளக்கம் கேட்டு அறிவிக்கை அனுப்பி உள்ளது. இவ்வாறு தொடர் அச்சுறுத்தல் ஏற்படுவதால், பட்டாசுத் தொழில் முடங்கும் நிலையும், பட்டாசு சார்ந்த 106 துணைத் தொழில்களும் நெருக்கடியைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு வார காலமாக பட்டாசுத் தொழிலாளர்களும், உற்பத்தி நிறுவனங்களும் பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்கக் கோரி தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இலட்சக்கணக்கான பட்டாசு தொழிலாளர்கள், உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் சுற்றுச் சூழல் விதிமுறைகளில் இருந்து பட்டாசு தொழிலுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.
தீர்மானம்: 11
தேனி மாவட்டத்தில், அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வுக் கூடத்தை அமைக்க மத்திய அரசு முடிவு எடுத்த நாள் முதல் அப்படி அமையும் ஆய்வுக் கூடம் தேனி மாவட்டத்துக்குப் பெரும் அழிவையும், குறிப்பாக பென்னிக் குயிக் கட்டிய முல்லை பெரியாறு அணையும், கேரளத்தில் உள்ள இடுக்கி அணையும் இடிந்துவிழும் அபாயமும் ஏற்படும். மேலும், தேனி உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரமான முல்லைப் பெரியாறு பாசன நீரையும், குடிதண்ணீரையும் இழக்க வேண்டிய பெரும் விபரீதம் உருவாகும் என்பதால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இத்திட்டத்தை எதிர்த்து மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தியது. சுற்றுச் சூழல் பாதுகாவலர் மேதாபட்கர் அம்மையாரை அழைத்து வந்து, மக்களிடையவிழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தியது. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் வழக்குத் தொடர்ந்து இத்திட்டத்திற்கு இடைக்கால தடை ஆணையும் பெற்றார். இந்தப் பின்னணியில் தற்போது மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசு தென்மண்டல பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் பூவுலக நண்பர்கள் தொடுத்த வழக்கின் தீர்ப்பையும் உதாசீனம் செய்து, திட்டத்தை நிறைவேற்ற தீவிர முயற்சி எடுத்து வருவது மிகவும் கவலை அளிக்கின்றது. நியூட்ரினோ திட்டத்திற்கு அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் அனுமதி கொடுக்கவில்லை. எனவே, தமிழக அரசு நியூட்ரினோ திட்டத்திற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி கொடுக்கக் கூடாது என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.
என தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்!