#MeToo: விரைவில் திரையுலகில் பெண்களுக்கு விசாகா குழு அமைப்பு....
திரைத்துறையில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் விரைவில் விசாகா குழு அமைக்கப்படும் என நடிகர் சங்கம் முடிவு...
திரைத்துறையில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் விரைவில் விசாகா குழு அமைக்கப்படும் என நடிகர் சங்கம் முடிவு...
பணியிடங்களில் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டதை வெளியே சொல்லாமல் புழுங்கிக்கொண்டிருந்த பெண்கள், சமூக வலைதளங்களில் #MeToo இயக்கத்தின் மூலம் தற்போது தங்களுக்கு ஏற்பட்ட நிலையைக் கூறிவருகின்றனர். திரையுல பிரபலங்கள் தொடங்கி, பல்வேறு துறையிலும் நடந்த பாலியல் ரீதியான பாதிப்புகளை பெண்கள் வெளியிட்டு வருகின்றனர்.
தற்போது தமிழக திரையுலக பிரபலங்கள் மீதும் #MeToo ஹாஸ்டேக் பயன்படுத்தி பாலியல் வன்கொடுமை புகார்கள் பதியப்பட்டு வரும் நிலையில் பாடகி சின்மயி பாடல் ஆசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகாரினை பதிவு செய்தார். இதையடுத்து, #MeToo மூலம் நடிகர் அர்ஜூன், தியாகராஜன் ஆகியோர் மீது நடிகைகள் புகார் தெரிவித்துள்ள விவகாரம், திரைத்துறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சென்னை ஹபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்க அலுவலகத்தில் சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
அதில், நீதிமன்றத்தால் பரிந்துரை செய்யப்பட்ட விசாகா குழு செயல்படும் சட்டங்களின் அடிப்படையில், திரைத்துறையில் குழு ஒன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அத்துடன், படப்பிடிப்பு தளங்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், இயக்குநர் சங்கம் மற்றும் திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தை சேர்ந்தவர்களை உள்ளடக்கிய உயர்மட்ட குழு ஒன்றை அமைப்பது என இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சங்க தலைவர் நாசர், விசாகா குழுவில் பெண்கள் அதிக அளவில் இருப்பார்கள் என்றும் விரைவில் விசாகா குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.