சென்னை: ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து, தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிமுக-வின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் சசிகலா. சட்டசபை அதிமுக கட்சியின் தலைவராகவும் தேர்ந்து எடுக்கப்பட்டதால் அவருக்கு வழிவிடும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கவர்னர் மாளிகையில் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். சசிகலா முதல்-அமைச்சராக தேர்ந்து எடுக்கப்பட்டதற்கான கடிதமும் கவர்னர் மாளிகையில் வழங்கப்பட்டது.


ஆனால், முதல்-அமைச்சராக பதவி ஏற்குமாறு கவர்னரிடம் இருந்து சசிகலாவுக்கு உடனடியாக அழைப்பு வரவில்லை.


இதற்கிடையே, தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்ததாகவும், அவமானம் படுத்தியதாகவும் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டி பேட்டி அளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பேட்டிக்கு பிறகு ஓ. பண்ணீர்செல்வத்தை அதிமுக-வின் பொருளாளர் பதவியிலிருந்து நீக்குவதாக சசிகலா அறிவித்தார்.


இதனால் அதிமுக-வில் பிளவு ஏற்பட்டு உள்ளது. ஆட்சியை பிடிப்பதில் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், சசிகலாவுக்கும் இடையே போட்டி ஏற்பட்டு உள்ளது. 


இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக கவர்னர் பொறுப்பையும் சேர்த்து கவனிக்கும் மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ், மும்பையில் இருந்து விமானம் மூலம் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை வந்தார். 


கவர்னரை சந்திக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாலை 5 மணிக்கும், சசிகலாவுக்கு இரவு 7.30 மணிக்கும் நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது.


எனவே, கவர்னரை சந்திப்பதற்காக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை 4.40 மணிக்கு கவர்னர் மாளிகைக்கு வந்தார். அவருடன் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் பி.எச்.பாண்டியன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோரும் சென்றனர்.


இந்த சந்திப்பின் போது, தனது ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற்றுக்கொள்ள விரும்புவதாக கவர்னரிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாக தெரிகிறது. மேலும் சில கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் கவர்னரிடம் அவர் அளித்தார். மாலை 4.45 மணிக்கு தொடங்கிய இந்த சந்திப்பு 5.10 மணி வரை நீடித்தது.


கவர்னருடனான சந்திப்பு முடிந்ததும் ஓ.பன்னீர்செல்வம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்துக்கு போய்ச் சேர்ந்ததும் அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.


அப்போது, உறுதியாக நல்லதே நடக்கும் என்று கூறிய அவர், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும் என்றும் தெரிவித்தார். ஆனால் கவர்னரிடம் பேசியது பற்றிய விவரங்களை அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார்.


இதேபோல் சசிகலா இரவு 7.30 மணிக்கு கவர்னர் மாளிகைக்கு சென்று வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 8 மணி வரை 30 நிமிடம் நடைபெற்றது. சசிகலாவுடன் 10 அமைச்சர்களும் முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ.வுமான செங்கோட்டையனும் கவர்னர் மாளிகைக்கு சென்று இருந்தனர்.


கவர்னரை சசிகலா சந்தித்து பேசிய போது, அதிமுக-வில் பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக கூறி, தன்னை சட்டசபை அதிமுக கட்சியின் தலைவராக தேர்ந்து எடுத்ததற்கான ஆவணச்சான்றுகளை அவரிடம் வழங்கினார்.


கவர்னரை சந்திக்க செல்லும் முன் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்ற சசிகலா, அங்கு தன்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்களின் பட்டியல் அடங்கிய கோப்பை வைத்து அஞ்சலி செலுத்தினார். எம்.ஜி.ஆர்., அண்ணா சமாதிகளிலும் அஞ்சலி செலுத்தினார்.


எனவே, முதல்-அமைச்சர் நாற்காலியில் அமரப்போவது ஓ.பன்னீர்செல்வமா? அல்லது சசிகலாவா? என்பது கவர்னர் எடுக்கும் முடிவை பொறுத்தே அமையும்.