இரத்ததானம் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அவசியம் ஏற்படுத்த வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது...


"மனிதநேயத்தின் உச்சக்கட்ட வெளிப்பாடாக விளங்கும் இரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் திங்கள் முதல் நாள் தேசிய தன்னார்வ இரத்த தான நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தேசிய தன்னார்வ இரத்த தான நாளின் கருப்பொருள் "இரத்த தானம் செய்வது மகிழ்ச்சிக்குரியது" என்பதாகும்.


இரத்த தானம் செய்வது மனித உயிரை காப்பாற்றும் புனிதமான செயல் ஆகும். இரத்த தானத்தின் முக்கியத்துவத்தை மக்கள் அனைவரும் அறிந்திடும் வகையில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் இணைந்து, எண்ணற்ற இரத்த தான முகாம்களை நடத்தி வருவதுடன், இரத்த தானம் குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது. மேலும், தன்னார்வ இரத்த தானத்தை ஊக்குவிக்கும் வகையில், ஓர் ஆண்டில் நான்கு முறை இரத்த தானம் செய்த ஆண்கள் மற்றும் மூன்று முறை இரத்த தானம் செய்த பெண்கள், சிறந்த முறையில் பணியாற்றிய இரத்த தான முகாம் அமைப்பாளர்கள், அரசு இரத்த வங்கி ஊழியர்கள் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசு பாராட்டு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கி கௌரவித்து வருகிறது.


தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு அரசு மற்றும் தனியார் இரத்த வங்கிகள் மூலம் 9,05,489 அலகுகள் இரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில், 99 விழுக்காடு இரத்தம் தன்னார்வ கொடையாளர்கள் மூலமாக பெறப்பட்டுள்ளன. இவ்வாறு சேகரிக்கப்படும் இரத்தம், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. 


தானங்களில் சிறந்தது இரத்த தானம் என்பதால், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, இரத்த தானம் குறித்து மக்களிடம் பெருமளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதன் விளைவாக, தன்னார்வ இரத்த தானத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. நடப்பாண்டில் தன்னார்வ இரத்த தானத்தில் தமிழ்நாடு 100 விழுக்காடு இலக்கை எய்திட பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்!