ஆம்பூர் அருகே வீட்டில் கழிவறை கட்டித்தருவதாக ஏமாற்றிய தந்தை மீது காவல்நிலையத்தில் 7 வயது சிறுமி புகார் அளித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேலூர் மாவட்டம், ஆம்பூர் நடராஜபுரம் பகுதியை சேர்ந்த கூலிதொழிலாளி இஷானுல்லா. இவரது மகள் ஹனீபாஜாரா (வயது 7). ஆம்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இஷானுல்லா குடும்பம் வறுமையில் காணப்பட்டதால் வீட்டில் கழிவறை வசதி கிடையாது. அதனால் குடும்பத்தினர் திறந்தவெளியில் கழிப்பிடம் செல்ல வேண்டிய நிலை.


இதனால் அவதியடைந்த ஹனீபாஜாரா தனது தந்தையிடம் வீட்டில் கழிவறை கட்டி தரக்கோரி பலமுறை கேட்டுள்ளார். அதற்கு தந்தை பள்ளியில் முதலிடம் பிடித்தால் வீட்டில் கழிவறை கட்டி தருவதாக கூறியுள்ளார். இதையடுத்து சிறுமி நன்கு படித்து எல்.கே.ஜி. முதல் 2 ஆம் வகுப்பு வரையிலும் பள்ளியில் முதலிடம் பெற்று வந்தாள். ஆனால் தந்தை கூறியப்படி கழிவறை கட்டிதரவில்லை. கழிவறை கட்டும்படி தந்தையிடம் தொடர்ந்து போராடி வந்தார்.


இந்நிலையில், விரைவில் கழிவறை கட்டித்தருவதாக எஹசானுமல்லா தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. தந்தை தொடர்ந்து ஏமாற்றி வருவதாக உணர்ந்த 7வயது சிறுமி, தாயுடன் சென்று அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 


அதில் முதல் மதிப்பெண்கள் எடுத்தால், கழிவறை கட்டித்தருவதாக தந்தை கூறியதாகவும், ஆனால், இதுவரை அதனை நிறைவேற்றவில்லை என்றும் புகாரில் சிறுமி கூறியுள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட உதவி ஆய்வாளர் வளர்மதி அறிவுறுத்தலின் பேரில் ஆம்பூர் நகராட்சி ஊழியர்கள் கழிவறை கட்டும் பணியை தொடங்கவுள்ளனர்.