இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் “மீலாதுன் நபி” திருநாள் வாழ்த்துச் செய்தி தெரிவித்துள்ளார். அதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் “மீலாதுன் நபி” திருநாள் வாழ்த்துச் செய்தி இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த பொன்னாளான “மீலாதுன் நபி” திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த “மீலாதுன் நபி” நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்


“பிறருக்கு உதவி செய்பவன், சினத்தை அடக்குபவன், பிறரை மன்னிப்பவன் இவர்களுக்கு இறைவன் எப்பொழுதும் இரங்குவான்”, “பிறருக்கு உதவக்கூடிய ஒரு சந்தர்ப்பத்தையும் அலட்சியப்படுத்தாதே, மற்றோருடன் அன்போடும் ஆதரவோடும் பழகு, உன்னிடம் இருப்பது தண்ணீரேயானாலும் அத்தண்ணீர் தேவைப்படுவோர்க்கு அதை அளித்து மகிழ்ந்திடு” போன்ற இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களின் அருட்போதனைகளை மக்கள் பின்பற்றி வாழ்ந்தால் உலகில் அன்பும், அறமும், அமைதியும் தழைத்தோங்கும். மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு இஸ்லாமியப் பெருமக்களின் நல்வாழ்விற்காக பல்வேறு நலத்திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது. உதாரணத்திற்கு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு ஆண்டுதோறும் 6 கோடி ரூபாய் அரசு மானியம் வழங்கிட அரசாணை வெளியிட்டு, மானியம் வழங்கி வருகிறது. 


இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த இப்புனித நாளில், உலகில் அமைதியும், சகோதரத்துவமும் நிறையட்டும், நலமும் வளமும் பெருகட்டும் என்று வாழ்த்தி, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது இனிய “மீலாதுன் நபி” நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.


இவ்வாறு தமிழக முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.