அமைச்சர் நேருவின் சகோதரர் கொலை வழக்கு - புதிய துப்பு கிடைத்திருப்பதாக தகவல்
அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில், சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் புதிய துப்பு துலங்கியுள்ளதாகவும் விரைவில் குற்றவாளிகளை நெருங்கி விடுவோம் எனவும் தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29 ல் நடைபயிற்சி சென்ற, தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருச்சி - கல்லணை சாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க கோரி ராமஜெயம் மனைவி லதா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.கொலையாளிகள் பிடிபடாத நிலையில், ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விசாரணை அறிக்கையை 3 மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.
சிபிஐ விசாரணையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாததால் வழக்கை மாநில காவல்துறையே விசாரிக்க வேண்டும் என ராமஜெயத்தின் சகோதரர் கே.என். ரவிசந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி. பாரதிதாசன், சிபிசிஐடி, சிபிஐ அமைப்புகள், 10 ஆண்டுகள் விசாரணை நடத்தியும் கொலைக்கான நோக்கம் கண்டறியப்படவில்லை எனக்கூறி வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் அரியலூர் டி.எஸ்.பி. மதன் சென்னை சிபிஐ-யை சேர்ந்த ரவி ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து உத்தரவிட்ட நீதிபதி 15 நாட்களுக்கு ஒரு முறை விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் விசாரணையை சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதில், விசாரணைக்கு தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, சிறப்பு புலனாய்வு குழு விசாரணை குறித்த ரகசிய அறிக்கையை தாக்கல் செய்தார். பின்னர் அவர், சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையில் புதிய துப்பு துலங்கியுள்ளது எனவும், சம்பவம் நடந்த காலத்தில் பணியில் இருந்த ஆறு போலீசார் உள்பட 198 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ளதாகவும், உயர் அதிகாரிகளையும் விசாரிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது எனவும், 43 அதிகாரிகள் புலன் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், விரைவில் குற்றவாளிகளை நெருங்கி விடுவோம் எனவும், கொலையாளிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் ரொக்க பரிசு அறிவிக்க உள்ளதாகவும் ஹசன் முகமது ஜின்னா குறிப்பிட்டார்.இதனையடுத்து, காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ரகசிய அறிக்கை குறித்து திருப்தி தெரிவித்த நீதிபதி, விசாரணையை ஜூன் 10ம் தேதி தள்ளிவைத்தார்.
மேலும் படிக்க | மாடுகளை திருடிச்செல்லும் டிப்டாப் திருடர்கள் : சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR