பாண்டிய மன்னன் பணியை தொடரும் பழனிசாமி -செல்லூர் ராஜூ!
பாண்டிய மன்னர் செய்த குடிமராமத்து பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து செய்து வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்!
பாண்டிய மன்னர் செய்த குடிமராமத்து பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து செய்து வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்!
மதுரையில் வைகை ஆற்றில் உள்ள கருவேல மரங்கள் அழிப்பு மற்றும் செல்லூர் கண்மாய் குடிமராமத்து பணிகள் இன்று நடைப்பெற்றது. அமைச்சர் செல்லூர் ராஜூ இப்பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடன் தெரிவிக்கையில்., "மதுரையில் குடிமராமத்து திட்டம் பாண்டிய மன்னர் காலத்தில் இருந்தே உருவாக்கப்பட்டது. அன்றைக்கு ஒரு மூதாட்டிக்காக புட்டுக்கு மண் சுமந்து சிவபெருமான் பிரம்படி வாங்கிய புராண வரலாறு கொண்டது மதுரை மண்.
பாண்டிய மன்னர்கள் உருவாக்கிய குடிமராமத்து பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார்" என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மழைநீர் சேகரிப்பு திட்டம் கொண்டு வந்தபோது திமுக குறை கூறியது. அன்றைக்கு திமுக ஒத்துழைத்து இருந்தால் தமிழகத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடே வந்திருக்காது. ஜெயலலிதா வழி வந்த அதிமுக ஆட்சி மதுரை மாவட்டத்தில் 126 ஏரிகள் மற்றும் கண்மாய்கள் தூர்வாரியுள்ளது. இதனால் மதுரை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லை.
கடந்த 2017-ஆம் ஆண்டு அதிமுக அரசு குடிமராமத்து செய்த கண்மாய் மற்றும் ஏரிகளில் திமுக-வினர் விளம்பரத்துக்காக போட்டியான குடிமராமத்து என்ற பெயரில் நாடகம் நடத்தினார்கள். அது மக்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் இந்த அரசு மக்களுக்காக நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
வைகை ஆற்றில் உள்ள கருவேல மரங்களை அகற்றும் பணியும் நடைப்பெற்று வருகிறது. செல்லூர் கண்மாய் ரூ.48 லட்சம் செலவில் குடிமராமத்து செய்யப்படுகிறது என பட்டியலிட்டார்.