மு.க. ஸ்டாலினுக்கு எதிராக மு.க. அழகிரி? பாஜக-வின் திட்டம் என்ன?
திமுகவுக்கு எதிராக வரும் மக்களவை தேர்தலில் மு.க. அழகிரி வைத்து பிரச்சாரம் செய்ய பாஜக திட்டமிட்டு உள்ளதாக தகவல்.
மறைந்த தலைவர் கலைஞர் அவர்களால் கடந்து 2014 ஆம் ஆண்டு திமுக-வில் இருந்து நீக்கப்பட்டவர் மு.க. அழகிரி. கலைஞர் கருணாநிதி அவர்கள் உடல்நல குறைவால் மறைந்ததை அடுத்து மீண்டும் தன்னை கட்சியில் இணைக்குமாறு மு.க. அழகிரி திமுக தலைமைக்கு செய்தி அனுப்பினார். மேலும் மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். பின்னர் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி தனது ஆதரவாளர்களுடன் மறைந்த மு.கருணாநிதியின் நினைவிடத்தை நோக்கி பேரணியும் நடத்தி காட்டினார்.
கலைஞர் இல்லாத கட்சியை காப்பாற்றவே நாங்கள் களத்தில் குதித்துள்ளோம். 2014-ஆம் ஆண்டிற்கு பின்னர் வெற்றியை பெறாத திமுக-வில் மீண்டும் தன்னை இணைக்காவிட்டால், கடும் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அழகிரி திமுக தலைமைக்கு எச்சரிக்கையும் விடுத்தார். ஆனால் அழகிரியின் நடவடிக்கைக்கு எந்தவித ரியாக்சனும் காட்டாமல் திமுக தலைமை அமைதியாகவே இருந்து வருகிறது.
மு.க. அழகிரி பாஜகவில் இணைய உள்ளார். அவரை வைத்து திமுகவுக்கு எதிராக வரும் மக்களவை தேர்தலில் பிரச்சாரம் செய்யலாம் என்ற நாட்டின் தேசிய கட்சியான பாஜக திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. மக்களவை தேர்தலுக்காக தமிழகத்தில் திமுக தலைமையில் ஏறக்குறைய வலுவான கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணி எதிராக மு.க. அழகிரியை பயன்படுத்த பாஜக வேலைகளை செய்து வருகிறது என்று நம்பத்தகுந்த வட்டாரம் தெரிவித்துள்ளன.
இந்தநிலையில் இதுக்குறித்து மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, மு.க. அழகிரி பாஜக-வில் இணைவது குறித்து, இதுவரை எந்த தகவலும் எனக்கு வரவில்லை. அதனால் அதுக்குறித்து கருத்து கூறமுடியாது என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.