தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதி, நாங்குநேரி தொகுதி மற்றும் புதுவை மாநிலத்தில் இருக்கும் காமராஜ் நகர் தொகுதி ஆகிய 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதனையடுத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை குறித்து நேர்க்காணலை நடத்தி வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தநிலையில், இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நேர்காணல் கூட்டத்தில், திமுக சார்பில் நா.புகழேந்தி விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தற்போது நா.புகழேந்தி விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளராக பதவி வகித்து வருகிறார். இவருக்கு 66 வயதாகிறது. இதே தொகுதியில் 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


விக்கிரவாண்டி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்ற ஒரு செய்தியும் சமூக ஊடகங்களில் வெளியானது. ஆனால் அது உண்மை இல்லை. நா.புகழேந்தி தான் வேட்பாளர் என அதிகாரபூர்வமாக திமுக அறிவித்துள்ளது. மீதமுள்ள நாங்குநேரி மற்றும் காமராஜ் நகர் தொகுதிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளது.