சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் தத்துவவியல் பாடத்தில் பகவத் கீதை குறித்து படிக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது. ஏற்கனவே முதுகலைப் பொறியியல் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு (எஐசிடிஇ) சில விருப்பப்பாடங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த வகையில் CEG, SAP, MIT, ACT படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தத்துவப் பாடம் படிக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது. தத்துவப் பாடம் என்ற முறையில் நான்கு இந்து வேதங்கள் மற்றும் பகவத்கீதை போன்ற புராணங்கள் சேர்க்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதற்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கு தமிழகம் முழுவதும் பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம், இந்த சம்பவம் தொடர்பாக பரிசீலனை செய்த பிறகு தான் பாடத்திட்டத்தில் சேர்ப்பதா? இல்லையா? என முடிவு செய்யப்படும் என விளக்கம் அளித்துள்ளது.


இந்தநிலையில், திமுக தலைவரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், பாடத்திட்டத்தில் வேதங்கள் மற்றும் பகவத்கீதை சேர்க்கப்பட்டதை கண்டித்துள்ளார். மேலும் இந்த பாடத்திட்டத்தை உடனடியாக மாற்றிடவேண்டும் எனவும் கூறியுள்ளார்.


அவர் கூறியது, 


அண்ணா பல்கலைக்கழகத்தின் CEG கேம்பசில் 2019-ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில், தத்துவப் பாடம் கட்டாயமாக்கப்பட்டு, அதில், "இந்திய - மேல்நாட்டு தத்துவப் படிப்பு" என்ற பெயரில் சமஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது!


#கீழடி அகழாய்வுகள் வெளியாகி, தொல்தமிழர்களின் - திராவிடப் பண்பாட்டின் தொன்மையையும் பெருமையையும் உலகம் அறிந்துள்ள நிலையில், தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதை உணர்ந்து, பல்கலைக்குப் பொறுப்பு வகிக்கும் ஆளுநரும், உயர்கல்வித்துறையும் இந்தப் பண்பாட்டு ஆதிக்கப் பாடத்திட்டத்தை மாற்றிடவேண்டும்.


இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.