கோடநாடு கொலை - கொள்ளை விவகாரம் குறித்து புலனாய்வு செய்து வீடியோ வெளியிட்ட முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேலிடன், கோடநாடு கொள்ளை தொடர்பாக சயன், மனோஜ் வீடியோ வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த வீடியோ தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோடநாடு சம்பவத்தின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக சயன் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
 
ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள தமிழக முதல்வர் பழனிசாமி, அரசியலில் தங்களை நேரடியாக எதிர்கொள்ள முடியாமல் எதிர்கட்சிகள் தவறான தகவலை பரப்புவதாகவும், அதன் பின்புலத்தில் இருப்பவர்கள் விரைவில் கண்டறிந்து தண்டிக்கப்படுவர் எனவும் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் பழனிசாமி மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி எதிர்கட்சி தலைவரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, 


கடந்த 11 ஆம் தேதி பத்திரிக்கையாளர் மாத்யூ டெல்லியில் பத்திரிகை நிருபர்களை சந்தித்து, அதிர்ச்சி தரும் தகவல் அடங்கிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கோடநாடு கொலை - கொள்ளை எப்படி ஏற்ப்பட்டது என்பது குறித்து குற்றம் சாட்டப்பட்டுள்ள கே.வி.சயன் என்ற ஷ்யாம் மற்றும் வயலார் மனோஜ் ஆகியோரின் பேட்டிகள் இடம் பெற்றுள்ளன. அந்த பேட்டியில், தற்போது தமிழக முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி சொன்னதால்தான் கோடநாடு பங்களாவிற்கு கொள்ளையடிக்கச் செல்கிறோம் என்று கனகராஜ் தங்களிடம் கூறியதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும் கோடநாட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் எடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு கொடுத்ததாகவும் ஷ்யாம் என்ற சயன் வாக்குமூலம் கொடுத்த வீடியோ வெளியானது.


தற்போது வெளியான ஆதாரங்கள் முதல்வருக்கு எதிராக இருப்பதால், அந்த வீடியோவை வெளியிட்டவர்கள் மீதே வழக்குப் போட்டு கைது செய்து தமிழக காவல்துறை விசாரித்து வருகிறது. இவர்களை தமிழக காவல்துறை கைது செய்திருப்பது சட்டவிரோத செயலாகும். இதன்மூலம் ஆதாரங்களை அழிக்கக்கூடும்.


எனவே சென்னை உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணை ஆணையத்தை அமைத்து கோடநாடு கொலை - கொள்ளை விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும். அப்பொழுது தான் உண்மை வெளிவரும். உண்மையான் குற்றவாளி தண்டிக்கப்படுவார்கள். 


இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.