காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டுவந்ததற்கு மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்திருப்பது தமிழகத்தின் ஜீவாதார உரிமையை ஆணிவேரோடு பிடுங்கி எறியும் கருணையற்ற செயல் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். 


திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.... தன்னாட்சி அமைப்பாக இருக்க வேண்டிய "காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை", மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சகத்தின் நேரடி நிர்வாகக் கட்டுப்பாட்டின்கீழ் மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்து ஆணையம் அமைக்கப்பட்டதன் நோக்கத்தைச் சிதைப்பதற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


மத்தியில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமைகளையும், தமிழக விவசாயிகளின் ஜீவாதார உரிமைகளையும் ஒவ்வொன்றாகப் பறித்து வரும் மத்திய அரசு, தற்போது இந்த "காவிரி ஆணையத்தையும்" தன் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருப்பது அநீதியானது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட 192 TMC நீரிலிருந்து, ADMK அரசு உரிய வகையில் புள்ளிவிவரங்களை எடுத்து வைத்து வாதிடாமல், உச்சநீதிமன்றத்தில் 14.75 டி.எம்.சி நீரைக் கோட்டைவிட்டது. காவிரி நடுவர் மன்றம் தந்த "காவிரி மேலாண்மை வாரியத்தையும்" கை நழுவவிட்டது. 


கடந்த 16.2.2018 அன்று உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பு அளித்து - அதன் அடிப்படையிலான காவிரி நதிநீர்ப் பங்கீட்டைச் செயல்படுத்துவதற்கு ஒரு "வரைவுத் திட்டத்தை" ஆறு வாரத்திற்குள் உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டும் - பல்வேறு காரணங்களைச் சொல்லி - அந்த காவிரி இறுதி வரைவுத் திட்டத்தை மூன்று மாதத்திற்கும் மேலாக மத்திய அரசு தாமதம் செய்தது. தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் நடத்திய "காவிரி உரிமை மீட்புப் பயணத்தின்" எழுச்சி காரணமாகவும், உச்சநீதிமன்றத்தில் எழுந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை சமாளிக்கவும், ஒருவழியாக 18.5.2018 அன்று "காவிரி வரைவுத் திட்டத்தை" அறிவித்தது மத்திய பா.ஜ.க. அரசு. 


இந்த தாமதத்தைக் கூட தட்டிக் கேட்க வக்கில்லாமல் - மத்திய பா.ஜ.க. அரசுடன் மாநிலத்தின் உயிர் நாடிப் பிரச்சினையான காவிரிப் பிரச்சினையில் கண்ணாமூச்சி விளையாட்டு நடத்திக் கொண்டிருந்தது இங்குள்ள முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமி தலைமையிலான அரசு. காவிரி வரைவுத் திட்டத்தின் அடிப்படையில், "காவிரி மேலாண்மை வாரியம்" அமைக்காமல்; உப்புச்சப்பில்லாத - உதவாக்கரையான - ஒரு பல்லில்லா "காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம்" அமைக்க அ.தி.மு.க. அரசு மத்திய பா.ஜ.க. அரசுக்கு மனமுவந்து ஒப்புதல் கொடுத்தது. அத்துடன் பா.ஜ.க. அரசுக்கு ஜால்ரா போடும் வகையில் "சகல அதிகாரங்களும் பெற்ற அமைப்பை உருவாக்கி விட்டோம்" என்று முதலமைச்சர் பழனிசாமியே வாதிட்டு, தன் முதுகில் தானே தட்டிக் கொடுத்துப் பாராட்டிக் கொண்டார். 


காவிரி வரைவுத் திட்டத்தில் உள்ள அனைத்து முரண்பாடுகளையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சட்டமன்றத்தில் - அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் - மக்கள் மன்றத்தில் எல்லாம் சுட்டிக்காட்டியும், அதையெல்லாம் நிராகரித்து, "அதிகாரம் பெற்ற அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது" என்று "பொய்வாதம்" செய்து பொழுதைப் போக்கினார் முதலமைச்சர் திரு. பழனிசாமி. "பொம்மை" அமைப்பாக அமைக்கப்பட்ட இந்த காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கும் முழு நேரத் தலைவரை நியமிக்காமல், மத்திய நீர்ப்பாசன வளர்ச்சித்துறையின் செயலாளரையே "பொறுப்புத் தலைவராக" நியமித்து இன்றுவரை மத்திய பா.ஜ.க. அரசு இந்த அமைப்பையே முற்றிலும் முடக்கி விட்டது.


தமிழக காவிரி நதிநீர் உரிமையை ஒவ்வொரு கட்டமாக விட்டுக் கொடுத்து - நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு ஆகியவற்றின் பயன்களைத் தமிழக விவசாயிகள் அனுபவிக்க விடாமல் செய்த குற்றத்தை அ.தி.மு.க. அரசு செய்திருக்கிறது. இது போதாது என்று, இப்போது காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தையே மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்து - அது தன்னாட்சி அமைப்பு அல்ல - மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்பட "கைகட்டி" நிற்கும் அமைப்பு என்ற நிலையை உருவாக்கியுள்ளது மத்திய அரசு.


இந்த அடாவடியான செயல், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைத் தட்டிப் பறிக்கும் செயல்! காவிரி நீரை நம்பியிருக்கும் வேளாண்மையை அடியோடு வேரறுக்கும் மனிதாபிமானமற்ற செயல்! தமிழகத்தின் ஜீவாதார உரிமையை ஆணிவேரோடு பிடுங்கி எறியும் கருணையற்ற, கண்டனத்திற்குரிய செயல் என்று தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல்சக்தி துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப் பிறப்பிக்கப்பட்டுள்ள 24.4.2020-ஆம் தேதியிட்ட அரசிதழை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 


காவிரி நதிநீர் உரிமை பறிபோவதை இனிமேலும் தமிழகம் பொறுத்துக் கொள்ள முடியாது. இந்த அரசிதழ் திரும்பப் பெறப்படவில்லை என்றால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும், விவசாயப் பேரமைப்புகளையும் ஒன்றுசேர்த்து மத்திய அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துக் கொள்வதோடு, முதலமைச்சர் த பழனிசாமி உடனடியாக தமிழக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்துள்ள முடிவினை கைவிட வேண்டும் என்று அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.