தமிழ்நாடு லோக் ஆயுக்தா- தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தெரிவுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க இயலாது என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக அவர் பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்த (என்-சிறப்பு)த் துறை அரசு செயலாளர், டாக்டர் சி.சுவர்ணா இ.ஆ.ப. அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது...


"மிழ்நாடு லோக் ஆயுக்தாவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களைத்  தேர்வு செய்யும் கூட்டம் 13.3.2019 அன்று நடைபெறவிருப்பதாகவும், அதில் தேர்வுக்குழுவின் உறுப்பினர் என்ற முறையில் நான் பங்கேற்க வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


ஊழல் வழக்குகளில் ஆழமாகச் சிக்கியுள்ள முதலமைச்சரின் தலைமையிலான இந்த மைனாரிட்டி  அரசு அமைக்க விரும்பும் லோக் ஆயுக்தா, தேவையான அதிகாரமற்ற- பல் இல்லாத  அமைப்பாக இருப்பது பற்றி, கடந்த 27.12.2018 அன்று தங்களுக்கு எழுதிய கடிதத்தில் நான் விரிவாகச்  சுட்டிக்காட்டியிருந்தேன். அந்த காரணங்கள் எவ்வித மாற்றமும் இன்றி இன்னும் அப்படியே நீடிக்கின்றன.


லோக் ஆயுக்தா அமைப்பை உண்மையிலேயே ஊழலை ஒழிக்கும் ஓர் அமைப்பாக மாற்றி அமைத்திட தேர்வுக்குழு உறுப்பினர் என்ற முறையில்,  நான் வழங்கிய ஆலோசனைகளை இந்த அரசு பரிசீலனை செய்யவோ, ஏற்றுக் கொள்ளவோ இதுவரை முன்வரவில்லை. ஆகவே வெளிப்படையான நேர்மையான  ஊழல் விசாரணைக்கு எந்த வகையிலும் உதவாத, அதிகாரமற்ற ஒரு லோக் ஆயுக்தா அமைப்பிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் கூட்டத்தில் நான் பங்கேற்க இயலாது என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.


---லோக் ஆயுக்தா---


அரசியல்வாதிகள், MLA-கள், உயர் அதிகாரிகள், MP-க்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், ஊழல் செய்தல் ஆகியவற்றை விசாரிக்க லோக் ஆயுக்தா, லோக்பால் சட்டம் கடந்த 2013-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.


இதனையடுத்து இந்த சட்டத்துக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் நாள் குடியரசு தலைவர் ஒப்புதல் கிடத்தது. பின்னர் அதே மாதம் 16 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. எனினும், இதுவரை தமிழ்நாடு, தெலுங்கானா உள்ளிட்ட 12 மாநிலங்கள் இதுவரை லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்தவில்லை.


இந்த மாநிலங்கள் உடனடியாக லோக் ஆயுக்தா அமைப்பை நிறுவ உத்தரவிடக்கோரி அஸ்வினி உபாத்தியாயா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதைப்போல திருச்சியை சேர்ந்த குருநாதன் என்ற சமூக சேவகரும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.


கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, லோக் ஆயுக்தா அமைக்கும் பணிகளை உடனே தொடங்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன் அடிப்படையில் கடந்த ஜூலை 9-ஆம் தேதி தமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றப்பட்டது.


பின்னர் இது தொடர்பான பிரமாண பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த தமிழக அரசு, லோக் ஆயுக்தா அமைக்க 2 மாதம் அவகாசம் கோரியது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் 2 மாதத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டனர். எனினும் 2 மாதத்துக்குள் லோக் ஆயுக்தா அமைக்கப்படவில்லை.


பின்னர் அக்டோபர் 24-ஆம் நாள் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு சார்பில் லோக் ஆயுக்தா உருவாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், அதற்கு இன்னும் 3 மாதம் கூடுதல் அவகாசம் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தமிழகத்துக்கு 3 மாதங்கள் அவகாசம் வழங்கிய பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பு செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்று உத்தரவிட்டனர். எனினும் மீண்டும் தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்படவில்லை.


இந்நிலையில் இந்த வழக்கு கடந்த பிப்., 11-அன்று மீண்டும் தலைமை நீதிபதி ரஞ்ஜன் கோகாய், நீதிபதி சஞ்சய் கன்னா ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது தமிழக அரசு தரப்பில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.


அதில், ‘தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்துவது தொடர்பான பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருகிறது. இதற்காக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் தேடுதல் குழு அமைக்கப்பட்டு உரிய பணிகள் தொடங்கி விரைவாக நடைபெற்று வருகின்றன. தேடுதல் குழுவின் பணி முடிவடைந்த பிறகு, தேர்வுக்குழு நியமிக்கப்பட்டு லோக் ஆயுக்தா தமிழ்நாட்டில் உருவாக்கப்படும்’ என்று குறிப்பிட்டிருந்தது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தமிழக அரசுக்கு மேலும் 4 மாதம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.