சென்னை: அதிமுக சட்டசபை தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து முறையிட திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்ல உள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வந்த பின்னர் சசிகலா முதல்வராக பதவி ஏற்க அனுமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கோரியுள்ளார்.


இதுதொடர்பாக, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து புகார் அளிக்க இன்று டெல்லி புறப்படுகிறார் மு.க. ஸ்டாலின். இதுகுறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்திக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.


சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு விரைவில் வர உள்ள நிலையில் சசிகலா முதல்வராக பதவி ஏற்றால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்றும் தீர்ப்பிற்கு பின்னர் பதவி ஏற்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் வலியுறுத்த உள்ளார்.


சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா இறந்தபோதிலும் சசிகலா உள்ளிட்ட மற்றவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு தீர்ப்பு தரப்படும் என்று மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா கருத்து கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் இன்று இரவு 7 மணிக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளார். டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.