வேலூர் மத்திய சிறையில் இருந்து MLA கருணாஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தியாகராயநகர் துணை போலீஸ் கமிஷனர் அரவிந்தன் ஆகியோரை விமர்சித்த வழக்கில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரான கருணாஸ் கடந்த 23-ந்தேதி நுங்கம்பாக்கம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார், பின்னர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.


இந்த வழக்கில் கருணாஸ் ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீமிபதி,. 30 நாட்களுக்கு தினமும் காலை 8.30 மணிக்கு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை ஜாமின் வழங்கினார்.


மேலும் கடந்த ஏப்ரல் 10-ஆம் நாள் IPL கிரிக்கெட் போட்டிக்கு எதிராக தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கிலும் கருணாஸ் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கிலும் அவர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். 


இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரோஸ்லின் துரை, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் 30 நாட்களுக்கு தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியுள்ளார். இவ்விரு வழக்குகளிலும், கருணாசுக்கு ஜாமீன் கிடைத்ததையடுத்து, இன்று காலை வேலூர் சிறையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். 


இதனையடுத்து இன்று செய்தியாளர்களை சந்திக்க அவர் "இன்னும் இதுபோல் ஆயிரம் வழக்குகளை சந்திக்க தயாராக உள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார்!