தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி ஆர் பாண்டியன் பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்ததை அடுத்து மன்னார்குடி காந்தி சிலை அருகே வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி விவசாயிகளோடு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன் பின்னர் செய்தியாளரிடம்  பேசும் போது அவர் கூறியது,


மத்தியில் மோடி பிரதமராக பொறுப்பேற்றது முதல் விவசாயிகளுக்கு விரோதமான கொள்கைகளைப் கார்ப்பரேட் ஆதரவாக பின்பற்றினார். குறிப்பாக வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு காப்பீடு திட்டம் கொண்டுவரப்பட்டது. அதனை தனியார் மயமாக்கி 12 கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சொந்தமான காப்பீட்டு நிறுவனங்களை அனுமதித்து, அவர்கள் பயனடையும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளை மாற்றியமைத்தார். 


இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உரிய காலத்தில் இழப்பீடு பெற முடியாத நிலையை ஏற்படுத்தினார். 2014-ல் ஒரு மூட்டை டிஏபி 380 ரூபாய், ஒரு மூட்டை யூரியா 150-க்கும் விலை கொடுத்து வாங்கினோம். இன்றைக்கு டிஏபி 1800, யூரியா 800 ரூபாய்க்கும் விலை கொடுத்து வாங்க வேண்டிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார்.


குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வதில் இருந்து தன்னை விலக்கிக் கொள்ள முயன்றார். லாபகரமான விலை நிர்ணயம் செய்வதில்லை என கொள்கை முடிவெடுத்தார். கடன் தள்ளுபடி செய்ய கொள்கை ரீதியாக மறுத்து, உச்ச நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்.


தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்ட பிரதமர் மோடி 2020-இல் கொரோனாவால் உலகமே முடங்கி இருந்த நிலையில், ஒரு சில மணி நேரங்கள் பாராளுமன்ற கூட்டத்தை கூட்டி விவசாயிகளுக்கு விரோதமான 3 சட்டங்களை தான் தோன்றித்தனமாக நிறைவேற்றினார். 


விவசாயிகளிடம் கருத்து கேட்கவில்லை, மாநில அரசுகளின் கருத்தரியவில்லை, மாறாக கார்ப்பரேட்டுகள் தயாரித்துக் கொடுத்த சட்டத்தை அவர்கள் விருப்பத்தின் பேரில் பாராளுமன்றத்தில் சட்டமாக்கினார்.


இதனை எதிர்த்து ஓராண்டுகாலம் விவசாயிகள் தீவிரமான போராட்டத்தில் களம் இறங்கினோம். இந்தியா சுதந்திரம் பெற்றததற்கு பிறகு ஒரு மறு சுதந்திரப் போராட்டத்தை இந்திய விவசாயிகள் மோடி அரசுக்கு எதிராக துவக்கினார்கள். இதனை ஏற்க மறுத்து மோடி அரசு விவசாயிகள் மீது தாக்குதலை துவக்கியது.


குறிப்பாக உள்துறை இணை அமைச்சரின் மகனே துப்பாக்கியால் சுட்டு பல விவசாயிகள் உயிரை பறித்தார். பல இடங்களில் பாஜக பாராளுமன்ற உறுப்பினர்கள், பாஜக ஆளும் மாநில அமைச்சர்கள் தனது வாகனங்களை விவசாயிகள் மீது ஏற்றி படுகொலையும்,பெரும் காயங்களையும் நிகழ்த்தினர். 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.


இதனையெல்லாம் பொருட்படுத்தாமல் உயிரை பணையம் வைத்து விவசாயிகள் நடத்திய தொடர் போராட்டம் மோடி அரசுக்கு மாபெரும் தோல்வியை ஏற்படுத்தியது. 


பல்வேறு  மாநில சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பாஜக ஆளும் மாநிலங்களிளேயே பாஜக படுதோல்வியை தழுவியது.


தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் இச்சட்டத்தை ஆதரித்ததால் அஇஅதிமுக-விற்கு தோல்வி ஏற்பட்டு ஆட்சியை இழந்தது. 


இந்நிலையில், உத்திரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 4மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில் மிகப்பெரிய தோல்வியை தழுவும் என்பதை ஒப்புக் கொண்ட பிரதமர் மோடி விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார்.


இதன் மூலம் விவசாயிகளின் போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழப்பிற்கு மோடி அரசே பொறுப்பேற்க வேண்டும். மேலும் நடந்த தவறுக்கு பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.


நடைபெற உள்ள பாராளுமன்ற கூட்டத்தில் சட்டத்தை திரும்பப்பெறும் மசோதாவை தாக்கல் செய்து சட்டமாக நிறைவேற்றும் வரையிலும் போராட்டம் தொடரும் என போராட்டக் குழு அறிவித்திருக்கிறது. 


எனவே இதனைப் பின்பற்றி தமிழகத்திலும் போராட்டங்கள் தொடரும் எனக்கூறினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR