Book Review: மான்டேஜ் மனசு - `காதல் சூழ் உலகு`... திரைக் காதலை காட்டும் சுவாரஸ்யமான புத்தகம்
Tamil Cinema Book Review: ஊடகவியலாளர், எழுத்தாளர் க.நாகப்பன் எழுதிய மான்டேஜ் மனசு (திரைக்குள் நம் காதல் தேடல்) 172 பக்கங்களில் 2017இல் தோழமை வெளியீடாக வந்துள்ளது.
Tamil Cinema Book Review: அலைபாய்ந்தவன் உணர்ந்த காதல்!, இன்றும் நெஞ்சில் அழியாத கோலங்கள்!, ஆள் மாற்றிடும் 'அட்டகத்தி' வியூகம்!, பிரேம அத்தியாயங்கள் ஓய்வதில்லை!, காதல் கொண்டவர்களின் கதை!, அனிதாக்களின் காலனிகள்!, அழகல்ல காதல்... காதலே அழகு!, விண்ணைத் தாண்டி வருபவர்கள்!, காதலுக்கு மரியாதை செய்தவர்கள்!, சுற்றிச் சுழலும் ரொமான்ஸ்கள்!, ஆனந்தியும் அவனும் 'தனி'த்துவ காதலும்!, காதல் கடத்தும் அழகிய தீ!, தொட்டுத் தொட்டுப் போகும் 'காதல்', ரெட்டை வால் காதல்!, நீரில் மூழ்கி காதலில் மீண்ட பறவை!, மாரிகளின் தீராக் காதலால் வாடா 'பூ'வுலகு, மௌன ராகம் காதலின் பேசாமொழி!, மாறாக் காதலின் பொக்கிஷங்கள், லன்ச் பாக்ஸ் மதிப்புமிகு மாற்றுக் காதல்! உள்ளிட்ட தலைப்புகளில் மான்டேஜ் மனசு சிலாகிக்கிறது. 'தமிழ் இந்து திசை' நாளிதழில் வெவ்வேறு காலகட்டங்களில் தொடராக வாசகர்களிடம் வரவேற்பைப் பெற்ற மான்டேஜ் மனசு நூல் வடிவமாக ஆக்கம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
துல்லியமான பார்வை
தான் பார்த்த திரைப்படங்களில் இருந்து தன்னைச் சுற்றி உள்ளவர்களின் காதலையும் தன் காதலையும் பொருத்திப் பேசுகிறார் நாகப்பன். இவர் திரைப்படங்களைப் பற்றி எழுதும் வழக்கமான பாணியில் இருந்து விலகிப் புதிய பாணியைக் கையாண்டுள்ளார். தமிழ் சினிமாவில் காதல் எந்தெந்தக் காலகட்டத்தில் எப்படி எல்லாம் பரிணமிக்கிறது என்பதான புள்ளியை அடைய வைக்கிறார். ஒவ்வொரு காலகட்டத்திலும் காதல் உருமாறிக் காட்சிப்படுகின்றன. திரையில் காட்டும் காதல் யதார்த்த வாழ்விலும், யதார்த்த வாழ்வில் உள்ள காதல் திரைப்படங்களிலும் பிரதிபலிக்கின்றன என்பதைத் துல்லியமாகக் காட்டுகிறார்.
மாயையிலும் யதார்த்தம்...
எழுத்தாளர் நாகப்பன் தன்னைச் சுற்றி உள்ளவர்களின் காதல் வழியாக திரைப்படக் காதலைத் தேடுவதும், தான் பார்த்த திரைப்படங்களின் காதல் வழியாகச் சுற்றி உள்ளவர்களின் காதலைத் தேடுவதும் என்பது புதிய அணுகுமுறை மட்டுமன்று. திரைப்படங்கள் காட்டும் வாழ்க்கை என்பது வேறு; யதார்த்த வாழ்க்கை என்பது வேறு; அதில் குறிப்பாகத் திரைக் காதல் என்றால் மாயை என்பதான கருத்தியலுக்கு மாற்றாகப் பேசுகிறது மான்டேஜ் மனசு. மேலும், நீண்ட காலமாகத் திரைக் காதல் மீது தொடுக்கப்படும் விமர்சனத்தைக் கேள்விக்குட்படுத்துகிறது. மாயையிலும் யதார்த்தம் குடிகொண்டுள்ளது என்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. யதார்த்த வாழ்வில் திரைக் காதலைச் சுட்டிக்காட்டிச் சுவாரசியமாக முன்னெடுத்துள்ளார் நாகப்பன்.
"வாசிப்பை நேசிப்போம்" நீலச் சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து - எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்
உளவியல் ரிதீயிலான வாசிப்பு
மான்டேஜ் மனசு நூலில் எல்லாப் பருவத்தினருக்கான காதலையும் தேடி எடுக்க முடியும். மேலும் திருமணத்திற்கு முன்னான காதலையும் திருமணத்திற்குப் பின்னான மாற்றுக் காதலையும் முன்வைத்து உரையாடுகிறது. நட்பு காதலாக மாறுவது, காதல் நட்பாக மாறுவது, ஒரு தலையாகக் காதலிப்பது, தன்னை விட மூத்தவரை அல்லது இளையவரைக் காதலிப்பது என்பதான பதிவும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளது. படிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்பதுபோல காதலிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்னும் கருத்தாடலை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது. ஒருவனுக்கு ஒரு காதல், ஒருத்திக்கு ஒரு காதல், ஒருவனுக்குப் பல காதல் என்தெல்லாம் பேசியும் ஒருத்திக்குப் பல காதலைப் பேசாமலும் செல்கிறது. காதலில் சூழல் காரணமாகச் சுமூகமாகப் பிரியும் காதல், வேதனையோடு பிரியும் காதல், சமூகத் தடைகளால் பிரியும் காதல், மனம் ஒன்றியும் ஒன்றாமலும் முதிர்ச்சி அடையாமலும் பிரிந்த காதல்களைப் பற்றிப் பேசுகிறது. திருமணத்திற்குப் பின்னான மாற்றுக் காதலை, முதிர்ந்த வயதில் உதித்த காதலை, திருமண வாழ்வில் பிடிபடாத மதிப்பு மிகு காதலை அணுகும் இடங்களில் உளவியல் தன்மையில் பார்ப்பதற்கான வாசிப்பைத் தாங்கிச் செல்கிறது.
புதிய வெளிச்சம்
திருமணத்தில் முடிந்த காதலையும், திருமணத்தில் முடியாத காதலையும், ஏற்றுக் கொண்ட, ஏற்றுக் கொள்ளாத காதலையும், மணம் முடிக்க மறுக்கும் காதலையும் பற்றிய உரையாடலில் காதல் பற்றிய மதிப்பீட்டை உள்வாங்கிக் கொள்ள இயலும். மேலும் காதல் என்றால் என்ன? உண்மைக் காதல் என்பது எது? உண்மை காதல் என்பது ஒன்று உண்டா? காதலுக்கான பொருள் என்ன? காதலின் உண்மை தன்மையைப் பார்க்க முடியுமா? அதன் நம்பகத் தன்மைதான் என்ன? அவற்றிக்கு எல்லை உண்டா? காதல் ஒரு இன்பியலா?, துன்பியலா? வெற்றி பெற்றால்தான் காதலா? தோல்வி அடைந்தால் அது காதல் இல்லையா? என்னும் மனநிலையில் உள்ளவர்களுக்கு மான்டேஜ் மனசு புதிய வெளிச்சத்தைக் காட்டும்.
'நச்' நாகப்பன்!
மாறாக் காதலின் பொக்கிஷங்கள் என்னும் தலைப்பில் கடித வடிவில் எழுதப்பட்டுள்ளது நினைவில் நிற்கக் கூடியதாக உள்ளது. திரைப்படங்களில் சில காட்சிகளை எளிதாகக் கடந்து சென்றதைக் கவனிக்க வைக்கிறார் நாகப்பன். கேட்ட பாடல்களை, பார்த்த திரைப்படங்களை மீண்டும் பார்க்கவும், கேட்கவும் தூண்டுகிறது. அதே தருணத்தில் பார்க்காத திரைப்படங்களையும் பார்க்க வைக்கிறார். மான்டேஜ் மனசு காதல் பற்றிய பார்வையையும் புரிதலையும் வாசகனால் உள்வாங்கிக் கொள்ள போக்கை அளிக்கிறது. தமிழ்மொழிப் படங்களைக் கடந்து வேற்று மொழிகளான மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப் படங்களைக் காட்சிப்படுத்தி விவரிப்பது வரவேற்கத்தக்கது. திரையும் சமூகமும் கடந்து வந்த காதல் பரிணாம வளர்ச்சியை அடையாளப்படுத்தும் நாகப்பன், இக்காதலை ஒரே நேர்க்கோட்டில் வைத்துப் பார்க்கவும் துணைசெய்கிறார்.
மான்டேஜ் மனசு நூலின் உட்தலைப்புகள் பெரும்பாலும் திரைப்படங்களின் பெயர்களைச் சுற்றியே வைக்கப்பட்டுள்ளன. அலைபேசி உரையாடல், சமூக ஊடகம், திடீர் சந்திப்பு எனப் பல்வேறு நினைவலைகளில் தொடங்குகிறார் நாகப்பன். வசந்த், சேரன், பா.ரஞ்சித், பாலு மகேந்திரா, சீனுராமசாமி, செல்வராகவன், மணிரத்தினம் போன்ற இயக்குநர்களின் திரைபடக் காதலை மிக விரிவாகவும் ஆழமாகவும் எடுத்து இயம்பியுள்ளார். மான்டேஜ் மனசு காதலைப் புனிதத்துவப்படுத்த முயற்சி செய்கிறது என்பதான பார்வையையும், காதலைக் கொண்டாடும் மனோபாவத்தை அளிக்கிறது என்பதான பார்வையை வாசகர்கள் பெறக்கூடும். மேலும், நூலின் அநேக இடங்களில் எழுத்தாளனின் குறுக்கீடு வாசகனின் வாசிப்புச் சுதந்திரத்திற்குத் தடையாக மாறக்கூடும். எழுத்தாளர் ஆண் நண்பர்களின் காதலைச் சிலாகிக்கும் அளவிற்குப் பெண் தோழிகளின் காதலையும் சிலாகிக்கத் தவறிவிட்டார். மேலும், வாசகனின் எண்ண ஓட்டத்தை அறிந்து வாசகனுடன் பேசிச் செல்லும் நடை வாசகனை இரசிக்க வைக்கும். வாசகனை நோக்கி எழுப்பப்படும் வினாக்கள் சிந்திக்க வைக்கின்றன.
மான்டேஜ் மனசு நூலை எழுதிய நாகப்பன் திரைக்குள் நம் காதல் தேடல் என்கிறார். ஆனால் மான்டேஜ் மனசு நூலை வாசித்த வாசகர்கள் மான்டேஜ் மனசு நூலுக்குள் தங்களது காதலைத் தேடுவார்கள். இந்த நூலை வாசித்து முடிக்கும் ஒவ்வொரு வாசகருக்கும் எழுத்தாளன் காதலைச் சுற்றி வாழ்ந்தாரா? இல்லை காதல் எழுத்தாளனைச் சுற்றி வாழ்ந்ததா? என்னும் வினா உறுதியாக எழும்.