நாகை: சாப்பிட்ட பிரியாணிக்கு காசு தர மறுப்பு - கேள்வி கேட்டதால் கடையை அடித்து நொறுக்கிய திமுக பிரமுகர்!
நாகை அருகே சாப்பிட்ட பிரியாணிக்கு காசு கேட்ட பெண் ஊழியரை திமுக பிரமுகர் உள்ளிட்ட 3 பேர் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் திருப்பூண்டி கடைத்தெருவில் அமைந்துள்ளது ஏ.கே.பிரியாணி உணவகம். இதேபகுதியின் மூன்றாவது வார்டு ஊராட்சி மன்ற உறுப்பினராக உள்ளார் திமுகவை சேர்ந்த ஞானசுந்தரி. இவரது கணவரும், திமுக பிரமுகருமான சுரேஷ், சிபிஐ கட்சியை சேர்ந்த கடுக்கா பக்கிரி மற்றும் சிபிஎம் கட்சியை சேர்ந்த கட்ட அஞ்சான் ஆகியோர் நேற்று ஏ.கே. உணவகத்திற்கு பிரியாணி சாப்பிட சென்றுள்ளனர்.
அப்போது உணவகத்தின் உரிமையாளர் வேலை நிமித்தமாக வெளியே சென்றுவிட்டதால் அங்கு பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர் மூன்று பேருக்கும் பிரியாணி சப்ளை செய்துள்ளார். நன்றாக பிரியாணியை ரசித்து ருசித்து சாப்பிட்ட அவர்கள் கடையின் உரிமையாளர் இல்லாததை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு இறுதியில் பணம் தராமல் கடையை விட்டு வெளியே சென்றுள்ளனர். இதை கவணித்த பணிப் பெண் மூன்று பேரிடமும் சாப்பிட்ட பிரியாணிக்கு பணம் தருமாறு கேட்டுள்ளார்.
அப்போது, ஆளுங்கட்சிகாரர்களிடமே காசு கேட்பாயா? என பணிப் பெண்ணிடம் திமுக பிரமுகர் சுரேஷ் மற்றும் அவரது நண்பர்கள் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும், விடாப்பிடியாக பணம் கேட்டு அந்த பெண் உறுதி காட்டியதால் ஆத்திரமடைந்த மூன்று பேரும் அங்கிருந்த உணவுப் பொருள்களை கீழே கொட்டி நாசப்படுத்தி உள்ளனர்.
மேலும் படிக்க | ட்விட்டரில் டிரெண்டாகும் ‘ஓசி பிரியாணி திமுக’
மேலும், தகாத வார்த்தைகளால் திட்டி அவரை அடிக்க பாய்ந்தபோது அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணை மீட்டு காப்பாற்றியுள்ளனர். இதுகுறித்து கடை உரிமையாளர் தமீம் அன்சாரி கீழையூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். ஆனால், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனிடையே போலீசில் புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த திமுக பிரமுகர் சுரேஷ் மற்றும் அவரது நண்பர்கள் மீண்டும் உணவகத்திற்கு வந்து அங்குள்ள ஊழியர்களை தரக்குறைவாக பேசியதோடு அல்லாமல் கடையையும் அடித்து நொறுக்கி சூறையாடியதாக தெரிகிறது.
இது குறித்து கடை உரிமையாளர் தமீம் அன்சாரி வர்த்தக சங்க பொறுப்பாளர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதைதொடர்ந்து அவருக்கு ஆதரவாக அப்பகுதியில் உள்ள வர்த்தக சங்கத்தினர் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் நாகை - திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் குற்றவாளிகளை கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் படிக்க | விருகம்பாக்க பிரியாணி உணவக தகராறு; ஸ்டாலின் அதிரடி முடிவு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR