வேலூர் சிறையில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி மகள் திருமணத்திற்காக ஒரு மாதம் பரோலில் வெளியே வந்தார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட்பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய  7 பெரும் 28 ஆண்டுகளாக சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்குமே விசாரணை நீதிமன்றத்தில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அந்த தண்டனையை உச்சநீதிமன்றம்  பல்வேறு காலக்கட்டங்களில் ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்தது. 


அதுமட்டுமின்றி, அவர்கள் அனைவரும் ஆயுள் தண்டனைக்காலமான 14 ஆண்டுகளை ஏற்கனவே சிறைகளில் கழித்துவிட்டதால் குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவுகளின்படி அவர்களை விடுதலை செய்யலாம் என்று கடந்த 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனடிப்படையில் அவர்களை விடுவிப்பதை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் அவர்களை விடுதலை செய்ய இயலவில்லை.


இந்நிலையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள நளினி, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிப்பதற்காக 6 மாத பரோல் வழங்குமாறு, சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் ஒரு மாதம் பரோல் வழங்கி உத்தரவிட்டது. 


அதன்படி, இன்று வேலூர் சிறையில் இருந்து நளினி பரோலில் வெளியே வந்தார். சத்துவாச்சாரியில் உள்ள சிங்கராயர் என்பவரது வீட்டில் நளினி தங்கவுள்ளார். ஊடகங்களிடம் பேசக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் நளினிக்கு பரோல். இதனால் பலத்த பாதுகாப்புடன் சத்துவாச்சாரிக்கு அழைத்து செல்லப்பட்டார்.