இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு; நாங்குநேரியில் அதிகம்.
கடந்த 30 ஆம் தேதியுடன் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததை அடுத்தும், இன்று இறுதி வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் நாங்குநேரி (Nanguneri), விக்கிரவாண்டி (Vikravandi) மற்றும் புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் (Kamaraj Nagar) தொகுதிகளுக்கு அடுத்த மாதம் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் (ByElections) நடைபெற உள்ளது. இந்த மூன்று தொகுதிகளுக்கும் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. அதற்கு அடுத்த நாள் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. இன்று (அக்டோபர் 3) பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுக்கள் திரும்ப பெறலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து இறுதி வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதிமுக, காங்கிரஸ் மற்றும் சுயேச்சை உள்பட 23 வேட்பாளர்கள் நாங்குநேரி தொகுதியிலும், விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக, திமுக, நாம் தமிழர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 12 பேர் இடம் பெற்றுள்ளனர். அக்டோபர் 21 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24 ஆம் தேதி நடைபெறும். அன்றே தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே தெரிவித்தள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிமுக + அதன் கூட்டணி கட்சியும், அதேபோல திமுக + அதன் கூட்டணி கட்சியும் போட்டியிடுகிறது. இந்த இரண்டு கட்சியை தவிர நாம் தமிழர் கட்சியும் (Naam Tamilar Katchi) களத்தில் இறங்கியுள்ளது. இடைத்தேர்தலில் தங்கள் பலத்தை நிருப்பிக்க திமுக (Dravida Munnetra Kazhagam) மற்றும் அதிமுக (All India Anna Dravida Munnetra Kazhagam) பல வியூகங்களை வகுத்து வருகிறது. இரண்டு கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், தேர்தல் பரப்புரையில் ஈடுபட தயாராகி வருகிறது.
புதுச்சேரி காமராஜ் நகர் (Kamaraj Nagar) தொகுதி:
இந்த தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் போட்டியிடுகிறது. மேலும் புதுச்சேரியில் காங்கிரஸ் ஆளும் கட்சியாக உள்ளது. அக்கட்சியின் சார்பில் ஜான்குமார் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் இருக்கும் என்.ஆர். காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இந்த கட்சியின் சார்பாக புவனேஸ்வரன் போட்டியிடுகிறார். இந்த இரண்டு கட்சிகளையும் எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் பிரவினா மதியழகன் போட்டியிடுகிறார்.
நாங்குநேரி (Nanguneri) தொகுதி:-
இந்த தொகுதியில் அதிமுக சார்பாக வெ.நாராயணனும், அதேபோல திமுக கூட்டணியில் உள்ள காங்கிரெஸ் சார்பாக ரூபி மனோகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பாக இந்த தொகுதியில் சா.ராஜநாராயணன் வேட்பாளராக களம் காண்கிறார்.
விக்கிரவாண்டி (Vikravandi) தொகுதி:
அதிமுக சார்பாக எம்.ஆர். முத்தமிழ் செல்வனும், திமுக சார்பில் விக்கிரவாண்டியில் புகழேந்தியும், நாம் தமிழர் கட்சி சார்பாக கு.கந்தசாமி போட்டியிடுகிறார்கள்.