அப்துல்கலாம் மணிமண்டபம்: பிரதமர் மோடி இன்று திறப்பு!
ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் அப்துல் கலாம் தேசிய நினைவகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு, டி.ஆர்.டி.ஓ., எனும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், பேக்கரும்பில், 16.5 கோடி ரூபாயில், நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தேசிய நினைவகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். விழா நடைபெறும் பகுதியிலும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடற்கரை பகுதி என்பதால் இந்திய கடலோர காவல்படையும், தமிழக கடலோரா காவல்படையும் கடல்வழி பாதுகாப்பை மேற்கொண்டுள்ளன. அபிக், செட்லட் என்ற பீரங்கிகள் தாங்கிய 2 அதிநவீன கப்பல்கள், 4 சிறிய ரக மரைன் கப்பல்கள் மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வெடிகுண்டுகளை கண்டுபிடித்து செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் 35 பேர் மண்டபம் விழா மேடை பகுதியில் இரவு பகலான சோதனை மேற்கொண்டுள்ளனர். 71 மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு விழா நடைபெறும் இடங்களில் துருவித்துருவி சோதனையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அப்துல்கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினமான இன்று இந்த மணிமண்டபத்தை, பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கிறார்.
இதற்காக அவர் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மதுரைக்கு இன்று காலை 10 மணிக்கு வருகிறார். விமான நிலையத்தில் அவரை கவர்னர் வித்யாசாகர் ராவ், தமிழக முதல்வர் பழனிசாமி ஆகியோர் வரவேற்கிறார்கள்.
பிரதமரின் வருகையையொட்டி ஒட்டுமொத்தமாக ராமேசுவரம் தீவு பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.